சென்னை: தனியார் கல்லுாரிகளில் படிக்கும் தங்களுக்கு, தகுதி இருந்தும் லேப்டாப் வழங்கப் படவில்லை என, மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழக அரசின், 2025 – 26ம் நிதியாண்டு பட்ஜெட்டில், அனைத்து கல்லுாரிகளிலும் படிக்கும் மாணவ – மாணவியருக்கு, முதல் கட்டமாக, இரண்டு ஆண்டுகளில், 20 லட்சம் ‘டேப்லெட்’ அல்லது ‘லேப்டாப்’ வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதில், ‘ஏசர், எச்.பி., மற்றும் டெல்’ ஆகிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. முதல் கட்டமாக, 10 லட்சம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரி இறுதியாண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு படிக்கும் மாணவ – மாணவியருக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், கடந்த ஜன., 5ம் தேதி துவக்கி வைத்தார்.
அரசு கல்லுாரி மாணவர்களை போல, தனியார் கல்லுாரி மாணவர்களுக்கும், இலவச லேப்டாப் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. அதன்படி, தற்போது வரை, 8.38 லட்சம் மாணவ – மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தனியார் கல்லுாரிகளில் படித்து வரும் மாணவ — மாணவியரில், இலவச லேப்டாப் பெற தகுதி கொண்ட பலருக்கு, இதுவரை வழங்கப்படவில்லை என, புகார்கள் எழுந்துள்ளன.
அதாவது, ஒரே வகுப்பறைகளில், ஒரே தகுதி கொண்ட மாணவர்களில் ஒருவருக்கு மட்டுமே லேப்டாப் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு, உயர் கல்வித் துறை உரிய தீர்வு காண வேண்டும் என, மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
