தங்கம் விலை ஏற்றத்துக்கு பின்னால் நாடுகளின் கடன் சுமை ஒளிந்துள்ளது: உலக தங்க கவுன்சில் சி.இ.ஓ., டேவிட் டைட்

உலக அளவில் தங்கம் வாங்குவதில் இந்தியா இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக, உலக தங்க கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் டைட் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக இந்தியா தனது தங்கம் இருப்பை இன்னும் பல மடங்கு உயர்த்த வேண்டியுள்ளது என அவர் பேசியிருப்பது இந்திய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வால் நகைகளுக்கான தேவை சற்றே குறைந்திருந்தாலும், முதலீட்டு ரீதியான தேவை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. 2025ல் இந்தியாவின் மொத்த தங்க தேவை 711 டன்களாக இருந்தது.

கலாசார ரீதியாக, தங்கம் இந்தியர்களோடு பிணைக்கப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் தனிநபர்கள் மட்டுமன்றி, பென்ஷன் பண்டுகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களும் தங்களது முதலீட்டு தொகுப்பில் தங்கத்தை ஒரு முக்கிய அங்கமாக மாற்றும்.

சர்வதேச அளவில் பார்க்கும்போது, தங்க விலை உயர்வுக்கு உக்ரைன் – -ரஷ்யா போன்ற புவிசார் அரசியல் பதற்றங்கள் ஒரு காரணம் என்றாலும், அதைவிட ஆழமான ஒரு காரணம் இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொதுக்கடன் அதிகரித்து வருவது உலக பொருளாதாரத்தில் ஒரு பயத்தை உருவாக்கியுள்ளது. தங்கம் விலை ஏற்றத்துக்கு பின்னால் நாடுகளின் கடன் சுமை ஒளிந்துள்ளது.

இதனால், பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் ஆர்வம் காட்டுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஆண்டுக்கு 1,000 டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொதுக்கடன் அதிகரித்து வருவது உலக பொருளாதாரத்தில் ஒரு பயத்தை உருவாக்கியுள்ளது. தங்கம் விலை ஏற்றத்துக்கு பின்னால் ‘நாடுகளின் கடன் சுமை’ ஒளிந்துள்ளது

இனி இந்திய சந்தை விலையே இறுதி

இ.டி.எப்.,களில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பை எப்படி கணக்கிட வேண்டும் என்பது குறித்து செபி ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, இதுவரை லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் விலையை அடிப்படையாக கொண்டு என்.ஏ.வி., கணக்கிடப்பட்டது. இனி, எம்.சி.எக்ஸ்., உள்ளிட்ட இந்திய சந்தைகளின் நேரடி விலையின் அடிப்படையில் கணக்கிடப்படும். இது இந்திய சந்தை நிலவரத்தை அப்படியே பிரதிபலிக்கும் என்பதால், முதலீட்டாளர்களுக்கு அதிக லாபகரமாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கும்.செபியின் புதிய விதிகள் வரும் ஏப்., 1, முதல் அமலுக்கு வருகிறது.

காலியாகும் வெள்ளி கிடங்குகள்

உலகின் முக்கிய வர்த்தக மையங்களான ‘காமெக்ஸ், ஷாங்காய்’ சந்தைகளில், வெள்ளியின் இருப்பு மிக வேகமாக குறைந்து வருகிறது. குறிப்பாக, காமெக்ஸ் சந்தையில், கடந்த அக்., மாதத்துடன் ஒப்பிடும்போது, இருப்பு 32 சதவீதம் சரிந்துள்ளது. 2015க்கு பிறகு ஷாங்காய் சந்தையில் மிக குறைந்த அளவு வெள்ளியே கையிருப்பில் உள்ளது. இது வினியோக தொடரில் பாதிப்பை ஏற்படுத்தி விலையை மேலும் ஏற்றக்கூடும்.

Source link