சர்வதேச சந்தையில் ‘ஸ்பாட் கோல்டு’ விலை நேற்று, 1.10 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து, ஒரு அவுன்ஸ் (31.100 கிராம்) 4,573 டாலருக்கு, அதாவது, கிட்டத்தட்ட 4.30 லட்சம் ரூபாயாக வர்த்தகமானாலும், மார்ச் மாதத்தை பொறுத்தவரை, விலை 13 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி, 5,594.82 டாலர், அதாவது கிட்டத்தட்ட 5.26 லட்சம் ரூபாய் என்கிற உச்ச விலையை பதிவு செய்தது. ஆனால், நடப்பு மார்ச் மாதத்தில் தலைகீழாக சரிந்து, முதலீட்டாளர்களை அதிர வைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஒரே மாதத்தில் அது இந்த அளவுக்கு சரிந்தது இதுவே முதல் முறை.
தங்கம் மட்டுமல்லாது வெள்ளி, பிளாட்டினம் போன்ற மற்ற உலோகங்களும், கடந்த மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளன.
தற்போதைய நிலையை நிபுணர்கள், ‘டெட் கேட் பவுன்ஸ்’ என்று அழைக்கிறார்கள். அதாவது, பலத்த சரிவுக்கு பின் வரும் ஒரு தற்காலிக சிறு ஏற்றம்.
இருப்பினும், ‘கோல்டுமேன் சாக்ஸ்’ நிறுவனம், 2026 இறுதிக்குள், தங்கம் மீண்டும் ஒரு அவுன்ஸ் 5,400 டாலர் வரை, அதாவது கிட்டத்தட்ட 5.08 லட்சம் ரூபாய் வரை உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
