புதுடில்லி: ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை இளவேனில் (10 மீ., ‘ஏர் ரைபிள்’) 2 தங்கம் வென்றார்.
டில்லியில், ஆசிய துப்பாக்கி சுடுதல் (‘ரைபிள்”https://www.dinamalar.com/”பிஸ்டல்’) சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் இளவேனில், 633.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். மற்ற இந்திய வீராங்கனைகளான ஆர்யா போர்ஸ் (630.3), மேகனா (628.6) முறையே 6, 7வது இடம் பிடித்தனர்.
பெண்களுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ அணிகள் பிரிவில் இளவேனில், ஆர்யா போர்ஸ், மேகனா இடம் பெற்ற இந்திய அணி 1892.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றது.
அடுத்து நடந்த தனிநபர் பிரிவு பைனலில் அசத்திய இளவேனில், 252.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை மேகனா (229.5) வெண்கலம் கைப்பற்றினார். இந்தியாவின் ஆர்யா போர்ஸ் (209.0) 4வது இடம் பிடித்தார்.
ஜூனியர் பெண்களுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவு பைனலில் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் ஷம்பவி (253.7 புள்ளி), மான்யதா சிங் (249.7), அனீஷா சர்மா (227.5) முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
ஆண்களுக்கான 50 மீ., ‘பிஸ்டல்’ தனிநபர் பிரிவில் சவுரப் சவுத்ரி (563.12 புள்ளி), கமல்ஜீத் (561.16), ரவிந்தர் சிங் (559.10) முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். இதன் அணிகள் பிரிவில் இந்தியா (1683.38) தங்கத்தை தட்டிச் சென்றது.
ஜூனியர் ஆண்களுக்கான 50 மீ., ‘பிஸ்டல்’ தனிநபர் பிரிவில் யோகேஷ் குமார் (557.10), குண்டஜப்ரீத் சிங் (542.7), தைரிய பிரஷார் (527.6) முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர். இதன் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு (1626.23) தங்கம் கிடைத்தது.
இதுவரை 8 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என, 15 பதக்கம் கைப்பற்றிய இந்தியா முதலிடத்தில் உள்ளது.
