டோருன்: உலக உள்ளரங்கு தடகளத்தில் ‘போல் வால்ட்’ போட்டியில் சுவீடனின் டுப்ளான்டிஸ் 4வது தங்கம் வென்றார்.
போலந்தில், உலக உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் 21வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான ‘போல் வால்ட்’ போட்டியில் சுவீடனின் அர்மாண்ட் டுப்ளான்டிஸ் 26, பங்கேற்றார். அதிகபட்சமாக 6.25 மீ., உயரம் தாவிய டுப்ளான்டிஸ் முதலிடம் பிடித்தார். உலக உள்ளரங்கு தடகளத்தில் தொடர்ச்சியாக 4வது தங்கத்தை (2022, 2024, 2025, 2026) தட்டிச் சென்றார் டுப்ளான்டிஸ்.
தவிர, உலக உள்ளரங்கு தடகளத்தில் அதிக உயரம் (6.25 மீ.,) தாவி புதிய சாதனை படைத்தார் டுப்ளான்டிஸ். இதற்கு முன் இவர், 2022ல் செர்பியாவின் பெல்கிரேடில் நடந்த போட்டியில் 6.20 மீ., தாவியது சாதனையாக இருந்தது.
ஒலிம்பிக் (2020, 2024), உலக சாம்பியன்ஷிப் (2022, 2023, 2025) போட்டியில் தங்கம் கைப்பற்றிய டுப்ளான்டிஸ், சமீபத்தில் சுவீடனில் நடந்த மாண்டோ கிளாசிக் போட்டியில், அதிகபட்சமாக 6.32 மீ., உயரம் தாவி புதிய உலக சாதனை படைத்திருந்தார்.
கிரீசின் எமானுவேல் கராலிஸ் (6.05 மீ.,), ஆஸ்திரேலியாவின் கர்டிஸ் மார்ஷல் (6.00 மீ.,) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
