பாட்டியாலா: இந்திய ஓபன் ‘த்ரோ’ போட்டிக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்றார்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், இந்திய ஓபன் ‘த்ரோ’ போட்டிக்கான 5வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான குண்டு எறிதலில் பஞ்சாப் வீரர் தஜிந்தர்பால் சிங் டூர் 31, பங்கேற்றார். ஆசிய விளையாட்டில் 2 முறை தங்கம் கைப்பற்றிய இவர், அதிகபட்சமாக 20.51 மீ., எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். கடந்த 2023ல் அதிகபட்சமாக 21.17 மீ., எறிந்த தஜிந்தர், தேசிய சாதனை படைத்திருந்தார். பஞ்சாப்பின் கரண்வீர் சிங் (19.36 மீ.,), ஹரியானாவின் சன்யாம் (18.28 மீ.,) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
பெண்களுக்கான குண்டு எறிதலில், ஹரியானாவின் யோகிதா, அதிகபட்சமாக 16.44 மீ., எறிந்து தங்கத்தை தட்டிச் சென்றார். ஷிக் ஷா (16.30 மீ.,), ரேகா (15.57 மீ.,) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
பெண்களுக்கான ஈட்டி எறிதலில், அதிகபட்சமாக 54.20 மீ., எறிந்த சஞ்சனா சவுத்ரி தங்கம் வென்றார். வெள்ளி, வெண்கலப்பதக்கத்தை முறையே தீபிகா (51.19 மீ.,), ஜோதி (47.42 மீ.,) கைப்பற்றினர்.
பெண்களுக்கான வட்டு எறிதலில் ராஜஸ்தானின் நிகிதா குமாரி (51.78 மீ.,) தங்கம் வென்றார்.
பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் உ.பி.,யின் தன்யா சவுத்ரி (61.09 மீ.,) தங்கம் வென்றார். ஒடிசாவின் திவ்யா (53.31 மீ.,), ராஜஸ்தானின் சோனியா (52.29 மீ.,) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
ஆண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் தம்னீத் சிங் (70.64 மீ.,) தங்கத்தை தட்டிச் சென்றார். சங்கிலி குண்டு எறிதலில் 70 மீ., துாரத்திற்கு அதிகமாக எறிந்த 6வது இந்தியரானார் தம்னீத். அடுத்த இரு இடங்களை ஆஷிஸ் ஜாகர் (66.33 மீ.,), தேவாங் (62.27 மீ.,) கைப்பற்றினர்.
