பெங்களூரு: இந்திய ஓபன் ‘போல் வால்ட்’ போட்டியில் தமிழக வீராங்கனை பரணிகா தங்கம் வென்றார்.
பெங்களூருவில், இந்திய ஓபன் ‘ஜம்ப்ஸ்’ போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான ‘போல் வால்ட்’ போட்டியில் தமிழகத்தின் பரணிகா, அதிகபட்சமாக 4.10 மீ., தாண்டி தங்கத்தை கைப்பற்றினார்.
பெங்களூரு, தேசிய சிறப்பு மையம் அணியின் சிந்துஸ்ரீ (3.95 மீ.,), மத்திய தொழில் பாதுகாப்பு படை அணியின் பபிதா படேல் (3.90 மீ.,) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். மற்றொரு தமிழக வீராங்கனை கார்த்திகா (3.80 மீ.,) 5வது இடம் பிடித்தார்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் சரண் (7.77 மீ.,) வெண்கலம் கைப்பற்றினார். கர்நாடகாவின் புருஷோத்தம் (7.87 மீ.,), ஒடிசாவின் சருண் பாயாசிங் (7.78 மீ.,) தங்கம், வெள்ளி வென்றனர்.
பெண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனலில் அசத்திய அஞ்சு பாபி விளையாட்டு அறக்கட்டளை அணியின் முபசினா (6.38 மீ.,) தங்கம் வென்றார். ரயில்வே அணியின் பவானி யாதவ் (6.27 மீ.,), அஞ்சு பாபி விளையாட்டு அறக்கட்டளை அணியின் ரவாதா (6.08 மீ.,) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் ஜே.எஸ்.டபிள்யு., அணியின் பூஜா (1.76 மீ.,) தங்கத்தை கைப்பற்றினார். ரயில்வே அணியின் கெவினா அஷ்வினி (1.74 மீ.,), பல்லவி பாட்டீல் (1.71 மீ.,) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
ஆண்களுக்கான (20 வயது) ‘போல் வால்ட்’ போட்டியில் தமிழகத்தின் ஹரிகரன் ரமேஷ் (4.55 மீ.,) தங்கம் வென்றார். பெண்களுக்கான (18 வயது) உயரம் தாண்டுதலில் ஹர்ஷினி (1.50 மீ.,) தங்கத்தை தட்டிச் சென்றார்.
