தங்கம், வெள்ளி இறக்குமதி அபாய அளவில் இல்லை: அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடில்லி: நம் நாட்டில், தங்கம், வெள்ளியின் இறக்குமதி அபாய அளவில் இல்லை; இதை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

இந்தியாவில் விற்பனைக்கு வரும் தங்கம் அனைத்தும் இறக்குமதி செய்யப்படுபவை. இப்போதைய நிலையில், நம்மிடம் சொந்தமாக தங்கம் உற்பத்தி செய்வதற்கான வசதிகள் இல்லை.

அதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், அவை நமது தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை. இந்தியாவில் குடும்பங்கள், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிப்பது வழக்கம். அதிலும், பண்டிகை காலங்களில் மக்களிடையே தங்கத்துக்கான தேவை அதிகரிப்பதும் இயல்பு.

இதனால் தான், தங்கத்தின் இறக்குமதி அதிகரித்துள்ளது. இருந்தாலும், தங்கம், வெள்ளியின் இறக்குமதி பெரும் அபாய அளவுக்கு சென்றுவிட்டது என்று சொல்ல முடியாது. ரிசர்வ் வங்கியும் இதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

இப்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதற்கு, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி சேமிப்பதுதான் காரணம். பெரும்பாலான உலக நாடுகள், குறிப்பாக அவற்றின் மத்திய வங்கிகள் தங்கம் இருப்பை அதிகரித்து வருகின்றன.

வங்கிகள் காப்பீடு போன்ற நிதி திட்டங்களை உண்மை தகவல்களை மறைத்து விற்பனை செய்யக்கூடாது; வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை அளிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீப காலத்தில் தங்கத்தின் இறக்குமதி மதிப்பு உயர்ந்தாலும், எடை அளவில் அதிகரிக்கவில்லை. தங்கம் இறக்குமதியை ஆர்.பி.ஐ., கவனித்து வருகிறது.

– சஞ்சய் மல்ஹோத்ரா, கவர்னர், ரிசர்வ் வங்கி.

Image 1540158

அமெரிக்க வரி நிலவரம் அமெரிக்க வரி விதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘அமெரிக்காவில், அதிபர் டொனால்டு டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பின், ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து வர்த்தக அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. இப்போது அதுகுறித்து முன்கூட்டியே கருத்து தெரிவிப்பது பொருத்தமாக இருக்காது’, என்றார்.

Source link