தங்குமிடம் குறித்து போலி இணையதளங்கள்: திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

திருப்பதி: தரிசனம் மற்றும் தங்குமிட வசதிகள் இருப்பதாக கூறி, போலி இணையதளங்கள் வாயிலாக மோசடியில் ஈடுபடுவோரிடம் கவனமாக இருக்கும்படி, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களை எச்சரித்து உள்ளது.

ஆந்திராவின் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனம், தங்கும் இடவசதிகள் தொடர்பாக, திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

இருப்பினும், திருமலை மற்றும் திருப்பதியில் பக்தர்கள் தங்குவதற்கு இடவசதிகள் தருவதாக போலி இணையதளங்களில் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

‘கர்நாடக பிரவாசி சவுதா’ என்ற பெயரில், திருமலையில் தங்கும் அறைகள் வழங்குவதாக அறிவிப்பு வெளியானதாகவும், அதை நம்பி ஏமாந்ததாகவும் கேரளாவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தேவஸ்தான நிர்வாகத்திடம் சமீபத்தில் புகார் அளித்தார்.

தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தேவஸ்தான, ‘லோகோ’வை பயன்படுத்தி, போலி இணையதளங்கள் வாயிலாக பக்தர்கள் ஏமாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருமலை திருப்பதி பெயரில் போலி இணையதளங்கள் உருவாக்கப்பட்டு தரிசனம் மற்றும் தங்குமிடம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, பக்தர்களிடம் பண மோசடி நடப்பது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான, ‘லோகோ’வை சட்டவிரோதமாக பயன்படுத்திய இணையதளங்கள் மீது, பதிப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதுபோன்ற போலி இணையதளங்களிடம் இருந்து பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக மட்டுமே, தரிசனம் மற்றும் தங்கும் இடங்களை பக்தர்கள் பதிவு செய்ய வேண்டும்.

சந்தேகத்திற்கிடமான போலி இணையதளங்கள் குறித்து தெரிந்தால், தேவஸ்தான நிர்வாகத்திடம் பக்தர்கள் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link