தங்கையை கேலி செய்த கும்பல்; பழி தீர்த்த அண்ணன்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த கைலாஷ்நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளது. இது குறித்து அப்பெண், தனது உறவினரான ஜெயன் சிவானந்தன் நாயரிடம் (51) இது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து, ஜெயன் அந்த கும்பலைத் தனது தங்கையைக் கேலி செய்யக் கூடாது என எச்சரித்துள்ளார். இருப்பினும், அதனைப் பொருட்படுத்தாத அவர்கள், தொடர்ந்து அப்பெண்ணைக் கேலி செய்து வந்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று (02-04-26) அந்த கும்பல் மீண்டும் அப்பெண்ணைக் கேலி செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெயன் இது குறித்து அந்த கும்பலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம், சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. அப்போது, ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற ஜெயன்  அந்த கும்பலை சேர்ந்த மூவரையும் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். பின்பு, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஜெயன் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. 

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தில் குண்டு பாய்ந்த அக்பர் அப்துல் ஷேக் பரிதாபமாக உயிரிழந்தார். அதே நேரத்தில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சமீர் அகமது ஷேக் மற்றும் அப்துல் ஹசன் ஷேக் ஆகியோர்  மும்ப்ராவில் உள்ள கல்சேகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 

தப்பிச் சென்ற ஜெயனை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியையும் கைப்பற்றினர். கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழும், ஆயுதச் சட்டத்தின் விதிகளின் கீழும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Source link