தஞ்சாவூர்: தஞ்சாவூரில், தி.மு.க., இளைஞரணி கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதிக்கு, நிர்வாகிகள் வேல் மற்றும் திரிசூலத்தை நினைவு பரிசாக வழங்கியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கினால், மக்களை கவர அவரவர் ஒரு ஆயுதத்தை கையில் எடுப்பது வழக்கம். அந்த வகையில், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் முருகன், வேலை கையில் எடுத்துக் கொண்டு, வேல் யாத்திரை நடத்தினார். பின், முதல்வர் ஸ்டாலின் கையில் வேல் ஏந்தினார்.
தொடர்ந்து சீமான், திருமாவளவன், பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் முருக கடவுளின் ஆயுதமான வேலை கையில் எடுத்தனர். கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் உதயநிதியும் வெள்ளி வேலை கையில் எடுத்தார்.
இந்நிலையில், தஞ்சாவூரில் நேற்று முன்தினம், தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
இதில் துணை முதல்வரும், இளைஞரணி செயலருமான உதயநிதி கலந்து கொண்டார். அப்போது, இளைஞரணி நிர்வாகிகள் வேல், திரிசூலத்தை நினைவு பரிசாக உதயநிதிக்கு வழங்கினர்.
‘தேர்தலுக்கு முன் வரை, ஹிந்து சனாதனத்தையும் ஹிந்து கடவுள்களையும் விமர்சித்து பேசுவது தி.மு.க.,வின் வாடிக்கை. தேர்தல் நெருங்கி விட்டால், ஹிந்து கடவுள்களை கையில் எடுப்பதை வாடிக்கையாக வைத்து உள்ளனர்.
‘அந்த வகையில் தான், தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஹிந்து சனாதனத்துக்கு எதிராக தொடர்ந்து முழங்கி வந்த உதயநிதிக்கு, கட்சி நிர்வாகிகள் வேல் வழங்க அதை சந்தோஷமாக பெற்றுக் கொள்கிறார்.
‘இதெல்லாம் வாக்காளர்களை ஏமாற்றும் வேலை. முருகக் கடவுளின் ஆயுதமான வேலை கையில் ஏந்தி மத்திய அமைச்சர் முருகன் வேல் யாத்திரை நடத்திய போது, வேலை வைத்து வன்முறைக்கு வித்திடுவதாக தி.மு.க.,வினர் குற்றம் சுமத்தினர்’ என, எதிர் கட்சியினர் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
