தஞ்சாவூர்: தஞ்சாவூர் தி.மு.க., வேட்பாளர் ராமநாதன், கோயிலில் செருப்பு காலுடன் நின்றபடி, தனது ஆதரவாளர் மாலை அணிவித்ததை ஏற்றுக்கொண்ட சம்பவத்திற்கு ஹிந்து அமைப்பினர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் சட்டசபை தொகுதிக்கான தி.மு.க., வேட்பாளராக மாநகராட்சி மேயர் ராமநாதன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ராமநாதன் ஆதரவாளர் ஒருவர் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, சிறிய கோயில் ஒன்றில் சாமி சன்னதி முன்பு மாலை அணிவித்தார்.
அப்போது, கோவிலில், வேட்பாளர் ராமநாதன் செருப்பு காலுடன் நின்றபடி, ஆதரவாளரும் ஷூ காலுடன் நின்று மாலையை அணிவிக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த போட்டோவை சதீஷ்குமார் என்பவர், பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில், கோயிலுக்கு முன்பு செருப்பு காலுடன் நிற்பது தான் திராவிட மாடல், தலை எழுத்து என ஒருவர் கமென்ட் செய்துள்ளார்.
இந்த போட்டோவுக்கு, ஹிந்து அமைப்பினர், கோயில் மரபுகளையும், மத உணர்வுகளையும் மதிக்காமல் தி.மு.க., வேட்பாளர் ராமநாதன் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி, எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
