தஞ்சாவூர்: மேகதாதுவில் அணை கட்ட சொல்லும் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாரை முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்துக்கு

தஞ்சாவூர்: மேகதாதுவில் அணை கட்ட சொல்லும் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாரை முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்துக்கு அழைத்தது துரோகம் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், அமமுக பொதுச்செயலர் தினகரன் இணைந்து பிரசாரம் செய்தனர்.

முதலில் பேசிய தினகரன், “சிலர் பயத்தின் உச்சத்தில் இருக்கின்றனர். எங்களுக்குள் இருந்தது அண்ணன், தம்பி சண்டைதான். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நம் தொண்டர்களும், நிர்வாகிகளும், ஒன்றாக இணைந்துவிட்டனர். கருத்து வேறுபாடுகளை மறந்து, திமுக என்கிற தீயசக்தியை ஆட்சியில் இருந்து அகற்றி, ஜெயலலிதா ஆட்சியை இபிஎஸ் தலைமையில் உருவாக்குவதற்கு இணைந்திருக்கிறோம்” என்றார்.

திட்டமிட்டு

இதையடுத்து இபிஎஸ் பேசியதாவது: பாஜ அரசு வஞ்சிப்பதாகச் சொல்கிறார் ஸ்டாலின். நீங்கள் 15 ஆண்டுகாலம் பல்வேறு மத்திய அரசில் பங்கு வகித்தீர்கள். தமிழகத்துக்கு எவ்வளவு நிதி கொண்டுவந்தீர்கள்..? குடும்பத்தில் இருப்பவர்கள் இடம்பெறவேண்டும், வளம் பெற வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது கூட நிதி பெற்றுக்கொடுக்கவில்லை. இப்போது திட்டமிட்டு பாஜவை விமர்சிக்கிறார்.

இணக்கமான சூழல்

அதிமுக ஆட்சியில் மத்திய அரசிடம் வைத்த கோர்க்கைகள் எல்லாம் நிறைவேற்றியது.இப்போது இணக்கமான சூழல் இல்லை, எப்போது பார்த்தாலும் பாஜவை விமர்சித்தால் எப்படி நிதி கிடைக்கும்? பாஜ, திமுக வெவ்வேறு கொள்கை கொண்ட கட்சிகள். தேர்தல் நடக்கும் வரை வேறுபாடு இருக்கலாம், தேர்தல் முடிந்த பின்னர் மக்களுக்கு நன்மை செய்வது கட்சிகளின் கடமை. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.

திரைப்படம் பார்க்க 3 மணி நேரம் செலவு செய்கிறார். ஓட்டு என்றால் நேரில் வந்து ஊர் ஊராகப் போய் டீ குடிக்கிறார். விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது நேரில் வந்து பார்க்க நேரமில்லை. அது என்ன பயிர் என்று கூட தெரியாது அவருக்கு. இப்படிப்பட்ட முதல்வர் தேவையா?

கிண்டல்

மேகதாதுவில் அணை கட்டுவதாக கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் சொல்கிறார், அவரை அழைத்துவந்து பிரசாரம் செய்கிறார் ஸ்டாலின். எவ்வளவு பெரிய துரோகம்..? இவர்களுக்கு அதிகாரம் தான் முக்கியம். மக்கள் முக்கியமல்லை. மேகதாதுவில் அணை கட்டிவிட்டால் டெல்டா பாலைவனமாகிவிடும். நமக்கு துரோகம் செய்பவருடன் பிரசாரம் செய்யும் முதல்வருக்கு சந்தர்ப்பம் கொடுக்காதீர்கள்.

முதல்வர் என்னை போலி விவசாயி என்கிறார். நிஜ விவசாயி, போலி விவசாயி என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? டிரேயில் பயிர்களைப் பார்த்த முதல்வர், கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலை அமைத்து பார்க்கும் முதல்வர் விவசாயிகளைக் காப்பாற்றுவாரா? விவசாயிகளை வஞ்சிக்கும் ஸ்டாலின் வரவேண்டுமா? ஒரு பயிரைக் காட்டி கரும்பா, நெல்லா, மக்காச்சோளமா என்று கேட்டால் தடுமாறுவார். இப்படிப்பட்டவர் நம்மை கிண்டலடிக்கிறார். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Source link