தடையை மீறி ரகசிய கம்பெனி: இந்திய வம்சாவளி தம்பதிக்கு சிறை

லண்டன்:பிரிட்டனில் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கி, நிறுவனங்களை நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், அந்த உத்தரவை மீறி, ரகசியமாக தொழில் நடத்தி வந்த இந்திய வம்சாவளி தம்பதிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் வெஸ்ட் மிட்லேண்ட் பகுதியை சேர்ந்தவர் பரத் ஜோஹியா, 71. இவர் ‘ஜோஹியா ஜுவல்லர்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து கடந்த 2014ல் அவர் நிறுவன இயக்குனராக செயல்பட 13 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

வரும் 2027 வரை இந்த தடை அமலில் இருக்கும் நிலையில், பரத் ஜோஹியா சட்டவிரோதமாக ‘டைமண்ட் பார்மா’ மற்றும் ‘பி.ஹெச்.ஜே., கன்சல்டிங் என இரு நிறுவனங்களை ரகசியமாக நடத்தி வந்துள்ளார். இதற்கு அவரது மனைவி லுாயிஸ் ஜோஹியா உடந்தையாக இருந்ததை பிரிட்டன் திவால் சேவை அமைப்பு நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தடையை மீறிய குற்றத்துக்காக பரத் ஜோஹியாவுக்கு ஒன்பது மாத சிறையும், உடந்தையாக இருந்த அவரது மனைவி லுாயிஸ் ஜோஹியாவுக்கு ஏழு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இருவரும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிறுவன இயக்குனராக செயல்படவும் தடை விதிக்கப்பட்டது.

தண்டனைக் காலம் நிறுத்தப்பட்டிருப்பதால், மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாத வரை சிறைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

Source link