தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமீப காலமாக தென்னிந்தியாவின் அடையாளமாக திகழும் குறிப்பிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் (Milky Mist, Dodla) குறித்து பரப்பப்பட்டு வரும் செய்திகள் தென்னிந்தியாவில் உள்ள முன்னணி தனியார் பால் நிறுவனங்களை அபகரிக்க உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் சதியாக இருக்குமோ..? கார்ப்பரேட்டுகளின் சதிச் செயலுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையமும் (FSSAI) துணை போகிறதோ..? என்கிற பலத்த சந்தேகம் எழுகிறது. இவ்விவகாரம் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை சீர்குலைத்து, பாலுற்பத்தி மற்றும் பால் விநியோகத் தொழிலில் ஈடுபட்டு வரும் தென்னிந்தியாவின் முன்னணி மற்றும் சிறு, குறு, நடுத்தர தனியார் பால் நிறுவனங்களின் வளர்ச்சியை சிதைத்து, ஒட்டுமொத்த பால்வளத்துறையை பாழாக்கி விடுமோ.. ? என்கிற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மில்கி மிஸ்ட், டோட்லா நிறுவனங்களை அழிக்க சதியா?
சுமார் 10மாதங்களுக்கு முன் ஆய்விற்காக எடுக்கப்பட்ட பால் மாதிரிகளில் தரம் குறைந்திருந்தாக (கொழுப்பு சத்து மட்டும் குறைவு என்பதால் அது பயன்படுத்த தகுதியற்றது என்று அர்த்தம் இல்லை) தென்னிந்தியாவில் உள்ள தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களின் தரம் குறித்து அப்போதே நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டு, 10மாதங்களுக்குப் பிறகு தற்போது அச்சு, காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் செய்திகள் பரப்பப்படுவதை வைத்து பார்க்கும் போது இதன் பின்னால் பொதுமக்களின் மத்தியில் அந்நிறுவனங்களுக்குள்ள நற்பெயரை சிதைத்து, தனியார் பால் நிறுவனங்கள் மீது பொதுமக்களுக்கு அவநம்பிக்கையை வினத்து, அந்நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களின் வணிகத்தை அழித்து அந்நிறுவனங்களை கைப்பற்ற உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தும் சூழ்ச்சி போல தெரிகிறது.
ஏனெனில், இந்தியாவின் ஒட்டுமொத்த பாலுற்பத்தி மற்றும் பால் வணிக தொழிலில் பாலில் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயன கலப்படத்திற்கு பெயர் போன ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஓடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களை விட தமிழ்நாடு, ஒருங்கிணைந்த ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, கோவா உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள தனியார் பால் நிறுவனங்கள் மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறது என்பதை இதே இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI) கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலமாகவே உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பால் நிறுவனங்கள் மீது கார்ப்பரேட் சதி
அதனால் தான் அரசு கூட்டுறவு பால் நிறுவனங்களை விட பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலை சற்று கூடுதலாக இருந்தாலும் கூட தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்களுக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஏகோபித்த ஆதரவை அளித்து வருகின்றனர்.அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலில் எந்த ஒரு பால் நிறுவனங்களும் கலப்படமோ அல்லது தரம் குறைவாகவோ உற்பத்தி மற்றும் விநியோகம் செய்வதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளவோ, அதில் சமரசம் செய்து கொள்ளவோ, அதனை அனுமதிக்கவோ முடியாது. அதே சமயம் சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களின் தரம் குறித்து ஆய்வுக்கு உட்படுத்திய காலகட்டத்திலேயே நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டு சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்.
தனியார் பால் நிறுவனங்கள் குறித்து எதிர்மறையான கருத்துகளை பரப்பும் வகையிலும் சுமார் 10மாதங்களுக்கு பிறகு இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) பெயரில் அச்சு, காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் செய்திகள் பரப்பப்படுவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தென்னிந்திய பால் நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும்
இந்த 21ம் நூற்றாண்டில் தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகளை விட பசுவின் பால் குடித்து, குறிப்பாக பாக்கெட் பால் குடித்து வளர்ந்தவர்களே அதிகம் என்கிற நிலையில், பாக்கெட் பால் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைத்து, தென்னிந்தியாவில் உள்ள தனியார் பால் நிறுவனங்களின் பால் வணிகத்தை அழிக்கத் துடிக்கும் கயவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.
மேலும் உயிர் காக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலுற்பத்தியால் கிராம பொருளாதாரம் கணிசமாக உயர்ந்து வருவதோடு, விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தின் அங்கமாகவும் திகழ்ந்து, பாலுற்பத்தி, பால் விநியோகத் தொழிலில் லட்சக்கணக்கானவர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று, தங்களின் வாழ்வாதாரத்தை பெற்று வருவதோடு, மத்திய, மாநில அரசுகளுக்கு ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரி வருவாயை தரும் தொழிலாகவும் விளங்கி கொண்டிருப்பதால் தென்னிந்தியாவின் அடையாளமாக திகழும் குறிப்பிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு குறித்து உரிய நீதி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு ஆவண செய்திட வேண்டும் .
ஆவின் மற்றும் அனைத்து தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களின் மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்தி அனைத்து நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களின் தரம் குறித்து பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு உடனடியாக முன் வர வேண்டும் எனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source link
