த .வெ.க., தலைவர் விஜய், தனியாக, ‘மொபட்’டில் ஊர் சுற்றும் தகவல் தெரியவந்துள்ளது.
த.வெ.க., தலைவர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை, கடந்த 30ம் தேதி தாக்கல் செய்தார். வேட்புமனுவுடன் தன் சொத்து பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, விஜய்க்கு 600 கோடி ரூபாய்க்கு மேல் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளன. சொந்தமாக விலை உயர்ந்த கார்கள் உள்ளன. வாகனப் பட்டியலில் உள்ள டி.வி.எஸ்., – எக்ஸ்.எல்., மொபட் வண்டி தான் மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வண்டியை, 67,000 ரூபாய்க்கு கடந்தாண்டு வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது வீட்டில் வேலை செய்வோருக்காக, அந்த மொபட்டை விஜய் வாங்கி இருக்கலாம் என கூறப்பட்டது.
ஆனால், தன் பயன்பாட்டிற்கு தான் மொபட்டை வாங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
விஜய் தனிமை விரும்பி. தனியாக ஊர் சுற்றுவது அவருக்கு பிடிக்கும். அதற்காகவே, மொபட் வாங்கியுள்ளார்.
விஜய் வீட்டிற்கு பால் மற்றும் நாளிதழ் போடுவதற்கு வரும் நபர், அதேபோன்று மொபட் பயன்படுத்துகிறார்.
மற்றவர்கள் தன்னை அடையாளம் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக, விஜயும் அதேபோன்ற மொபட் வாங்கி பயன்படுத்துகிறார். அதிகாலையில், கிழக்கு கடற்கரை சாலையில் மட்டுமின்றி, தன் வீட்டை சுற்றியுள்ள தெருக்களிலும், அவர் அவ்வப்போது அந்த வண்டியில் வலம் வருவார்.
வீட்டிற்கு அருகேயுள்ள கட்சி அலுவலகம் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கும், ஹெல்மெட் அணிந்தபடி யாருக்கும் சந்தேகம் வராமல் மொபட்டில் சென்று வருகிறார்.
நடிகர் ரஜினி மாறுவேடத்தில் வெளியில் செல்வது போல, விஜய் மொபட்டில் சுற்றுகிறார்.
இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
