சென்னை: ‘கிறிஸ்தவர்களாக மதம் மாறி வாழ்ந்து கொண்டு, தனித்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது: தேர்தலில் தனித்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும்பாலும், தங்களுடைய தினசரி வாழ்வில் கிறிஸ்துவ வாழ்வியல் முறைப்படி வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த, காட்டுமன்னார் கோவில் வேட்பாளர் திருமாவளவன், திண்டிவனம் வேட்பாளர் வன்னியரசு, பெரியகுளம் வேட்பாளர் சக்திவேல், கள்ளக்குறிச்சி வேட்பாளர் மாலதி, செய்யூர் வேட்பாளர் சிந்தனைசெல்வன், அரக்கோணம் வேட்பாளர் எழில் கரோலின் ஆகியோர் கிறிஸ்துவர்கள்.
இதுபோல, எழும்பூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் தமிழன் பிரசன்னா, வால்பாறை தொகுதி தி.மு.க., வேட்பாளர் லட்சுமண சிங் ஆகியோரும் கிறிஸ்துவர்கள். இவர்கள், பட்டியலின மக்களுக்கான தனி தொகுதிகளில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இது முழுக்க முழுக்க இந்திய அரசிலயமைப்பு சட்டப்படி குற்றமாகும்.
மேலும், அம்பேத்கர் கொள்கைக்கும், இந்திய அரசியல் சாசனத்திற்கும் எதிரானதாகும். இவர்களின் ஜாதி சான்றிதழின் உண்மையை, இந்திய தேர்தல் கமிஷனும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் கண்டறிந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
