கடந்த சில நாட்களாகவே தனுஷின் அரசியல் நகர்வுகள் மற்றும் நிர்வாகிகளுடனான சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தனுஷ் கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் முகாமிட்டு முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார்.
மகளிர் அணி நிர்வாகிகளுடன் தனுஷ் சந்திப்பு?
இதனைத் தொடர்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் நற்பணி மன்றத்தின் மகளிர் அணி நிர்வாகிகளைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இந்தச் சந்திப்பில் மகளிர் அணி நிர்வாகிகள் மட்டுமே முழுமையாகக் கலந்துகொள்வார்கள் என்றும், ஊடகங்கள் மற்றும் வெளி நபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிறந்தநாள் சந்திப்பு ஏற்படுத்திய எதிர்பார்ப்பு
தனுஷின் பிறந்தநாளுக்கு முன்பாக நடைபெற்ற மிகப்பெரிய ரசிகர் மன்றச் சந்திப்பு அரசியல் வருகைக்கான அடித்தளமாக அமைந்த நிலையில், டெல்லி பயணத்தை முடித்துத் திரும்பியதும் இந்த மகளிர் அணிச் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நடிகர் தனுஷ் தனது கட்சியின் கொடி மற்றும் பெயரை விரைவில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நகர்வுகள் மக்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்துவது அரசியல் கட்சிகள் பின்பற்றும் முக்கிய உத்திகளில் ஒன்றாகும்.
பெண்களின் வாக்குகளைக் குறிவைக்கும் தனுஷ்
தமிழக அரசியலில் தனது காலடித் தடங்களைப் பதித்து வரும் நடிகர் தனுஷ், மகளிர் அணியினரைச் சந்தித்துத் தனது அமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தவெகவின் பலமே இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகள் தான் என்பதால், அந்த மகளிர் வாக்குகளைத் தன்பக்கம் ஈர்க்கவே பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தாய்மை ஊக்கத்தொகை, அண்ணன்சி திட்டம் மற்றும் வெற்றிப் பயணம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் பெண்களைக் கவரும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பெண்களின் ஆதரவு தவெகவிற்கு பலமாக உள்ள நிலையில், அதை மேலும் தக்கவைக்கத் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
ஆனால், நடிகர் விஜய்யுடன் ஒப்பிடும்போது தனுஷுக்கு பெண்களிடையே அந்த அளவுக்கு நேரடியான செல்வாக்கு இல்லை என்றே கூற வேண்டும். மக்களின் செல்வாக்கைத் தாண்டி பெண்களின் ஆதரவை முழுமையாகப் பெற வேண்டும் என்பதற்காகவே தனுஷ் மகளிர் அணியினரைச் சந்திப்பதில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
விஜய்க்கு எவையெல்லாம் பலமாக இருக்கிறதோ, அதே போன்ற உத்திகளைக் கையாண்டு பெண்களின் வாக்குகளைத் தன்வசப்படுத்தத் தனுஷ் வியூகம் வகுத்து வருகிறார். மற்ற நிர்வாகிகளைச் சந்திப்பதை விட, மகளிர் அணியை உடனடியாகச் சந்தித்து வருவது இந்த அரசியல் நகர்வின் ஒரு பகுதியாகும். இந்தச் சந்திப்புகள் தனுஷின் அரசியல் பயணத்திற்கு வலுசேர்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நடிகர் விஜய் ஒரு அரசியல் பார்முலா
தமிழக அரசியலில் நடிகர்களின் அரசியல் வருகை புதிதல்ல. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சினிமாவில் பெற்ற செல்வாக்கை அரசியல் ஆதரவாக மாற்றி, தனக்கென வலுவான மக்கள் ஆதரவை உருவாக்கினார்.
அதேபோல், நடிகர் விஜய்யும் ரசிகர் மன்றங்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பல ஆண்டுகளாகத் தனது அமைப்பை வளர்த்தார். பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி அரசியல் களத்தில் இறங்கினார்.
விஜய்யின் அரசியல் வளர்ச்சிக்கு ரசிகர் ஆதரவு மட்டுமின்றி, அமைப்பு ரீதியான பணிகள், மக்கள் தொடர்பு மற்றும் தொடர்ச்சியான அரசியல் நடவடிக்கைகளும் முக்கியப் பங்கு வகித்தன.
விஜயின் அரசியல் வருகை என்பது முற்றிலும் வேறுபட்டது. 2011 காலகட்டங்களிலேயே விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தது. ஜெயலலிதா எங்கு செல்லச் சென்றாரோ, அங்கு விஜய் மக்கள் இயக்கம் கொடிகளுடன் நின்றது.
அதுமட்டுமில்லாமல் மக்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு இணக்கமான உறவு இருந்தது. அதுதான் தற்போது வெற்றி பெற்று முதல்வராக விஜய்யை அமரவைத்துள்ளது.
அரசியல் களத்தில் புதிய வியூகம்!
ஆனால், தனுஷின் அரசியல் நகர்வுகள் வேறுவிதமாக அமைந்துள்ளன. நடிகர் தனுஷை பொறுத்தவரை, அவரது சினிமா திரைப்படங்கள் மற்றும் அதன் மூலம் கிடைத்த ரசிகர்களின் பலத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியலை நோக்கி நகர்கிறார்.
விஜய் அரசியலையும் தனுஷ் அரசியலையும் ஒரே நேர்கோட்டில் ஒப்பிட்டுப் பார்ப்பது கடினம் என்றாலும், தனுஷ் தனது திரைப்படங்களின் வழி மூலமாகவும், திரைக்கு அப்பால் தான் கொண்டுள்ள நற்பணி இயக்கத்தின் மூலமாகவும் தனது அரசியல் தளத்தை வலுப்படுத்த முயன்று வருகிறார்.
விஜய்யைப் போலவே தனுஷும் தனது அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான தொடக்கக் கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், விஜய்யின் அரசியல் எழுச்சி என்பது பல வருட உழைப்பு மற்றும் தொடர்ச்சியான மக்கள் சந்திப்புகளின் மூலம் சாத்தியமானது. தனுஷும் அதே போன்றதொரு மக்கள் ஆதரவைப் பெறத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
எதிர்காலத்தில் இவர்களின் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
