“தப்பித்துவிடலாம் என்று நினைக்க வேண்டாம்” – ஆதவ் அர்ஜுனாவை கண்டித்த மாணிக்கம் தாகூர்!

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த தேர்தலை முன்னிட்டு தவெக சார்பில் எழும்பூரில் நேற்று (24-03-26) பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பொதுச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் என 100 பேர் நமது தவெக ஆபிஸில் உட்கார்ந்திருக்கிறார்கள். மாற்றம் வரும் என்று நினைத்தோம், ஆனால் ஏமாற்றிவிட்டார்கள் என்று புலம்புகிறார்கள். காங்கிரஸில் 1 க்ரூப் இருக்கிறது. ஒன்று ராகுல் காந்தி, இன்னொன்று திமுக, திமுக என சொல்லும் வயதானவர்கள் க்ரூப். வேட்புமனுத் தாக்கல் முடிய 4 மணி நேரம் இருக்கும் வரைக்கும் புதுச்சேரியில் கூட்டணியே முடிக்கவில்லை. இதெல்லாம் ஒரு கூட்டணியா? காங்கிரஸை வேட்புமனுவை தாக்கல் செய்யாமல் பார்த்துக் கொண்டது திமுக, இது தான் திருட்டு திமுக. புதுச்சேரியில் காங்கிரஸ் நடுத்தெருவில் நிற்கிறது. அங்கு நாராயணசாமிக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை.

நாராயணசாமி மாதிரி இங்கு பா.சிதம்பரம் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் ஒட்டு மொத்த பொதுச்செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களும் தவெக வாசல் முன்பு நிற்கிறார்கள். ராகுல் காந்தி விஜய் மீது அன்பு வைத்திருக்கிறார். ஆனால் இங்குள்ள வயதானவர்கள் பெட்டி வாங்கிக் கொண்டு அடமானம் வைத்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் புலம்புகிறார்கள். இன்னும் 2 நாட்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியமாக போகிறார்கள். பிடிக்காத ஒரு பெண்ணை அழைத்து ரூமில் அடைத்து கட்டாய கல்யாணம் செய்தது போலத்தான் திமுக – காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது” என்று காட்டமாகப் பேசினார்.

இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவுக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அதவ் அர்ஜுனின் கருத்துகள் வெறும் பொறுப்பற்றவை அல்ல, அவை கடுமையாக கண்டிக்கத்தக்கவை. இந்திய தேசிய காங்கிரஸ் என்பது சாதாரண கருத்து தெரிவிக்கும் மேடை அல்ல; இது தியாகம், ஒழுக்கம் மற்றும் கூட்டு முடிவெடுப்பின் அடிப்படையில் உருவான வரலாற்றுப் பெரும் இயக்கம். நாங்கள் ஒரு குடும்பமாக செயல்படுகிறோம், ஒன்றாக முடிவு செய்கிறோம், ஒன்றாக செயல்படுத்துகிறோம். இந்த அமைப்பின் வரலாறும் மரபும் தெரியாதவர்கள் ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிடாமல் அமைதியாக இருக்க வேண்டும். மேலும் தெளிவாகச் சொல்கிறேன் காங்கிரஸ் கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்த அமைப்பில் இடமில்லை.

நாங்கள் மகாத்மா காந்தியின் சிந்தனைகளையும், தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் காட்டிய மக்கள் பாதையையும் உறுதியாக பின்பற்றுகிறோம். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிளவை உருவாக்கும் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக அச்சமின்றி தினமும் போராடி வருகிறார். அவரது தலைமையிலும், மல்லிகார்ஜுன் கார்கேவின் வழிகாட்டுதலிலும், கட்சி உறுதியாகவும் ஒன்றுபட்டும் நிற்கிறது. பொறுப்பில்லாமல் பேசிவிட்டு தப்பித்துவிடலாம் என்று நினைக்க வேண்டாம். நாங்கள் பதிலடி உறுதியாகவும் கொடுப்போம். இது சாரசரி கட்சி அல்ல ..இது கொள்கைக்கான  கட்சி, தியாகம் எங்கள் அடையாளம். ஒற்றுமை எங்கள் வலிமை” எனத் தெரிவித்துள்ளார். 

Source link