மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த என்.ஆர். இளங்கோ, பி. செல்வராசு, எம். தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி என்.வி.என். சோமு மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் கடந்த 2ஆம் தேதியுடன் (02.04.2026) முடிவடைந்தது. முன்னதாக இந்த காலி இடங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து திமுக சார்பில் திருச்சி சிவா, ஜெ. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அதிமுக சார்பில் எம். தம்பிதுரை, காங்கிரஸ் கட்சி சார்பில் எம். கிறிஸ்டோபர் திலக், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து 6 வேட்பாளர்களும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். அதாவது காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்குக் கூடுதலாக வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யாததால், தேர்தல் நடத்தப்படாமல் போட்டியின்றி வெற்றி பெற்றதாக (09.03.2026) அறிவிக்கப்பட்டனர். அந்த வகையில் திமுக சார்பில் 2 உறுப்பினர்களும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேமுதிக சார்பில் தலா ஒருவரும் என மொத்தம் 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதே போன்று அதிமுக கூட்டணியில் அதிமுக சார்பில் ஒருவரும், அதன் கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் ஒருவரும் என மொத்தம் 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் திருச்சி சிவா, ஜெ. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அன்புமணி ராமதாஸ், எம். கிறிஸ்டோபர் திலக், எல்.கே. சுதீஷ் மற்றும் எம். தம்பிதுரை ஆகியோர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று (06.04.2026) பதவி ஏற்றுக்கொண்டனர். இன்று காலை 11 மணிக்கு அவை கூடியதும் மாநிலங்களவை தலைவரும், துணைக் குடியரசுத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர்கள் 6 பேரும் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.
அதே போன்று மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் இருந்தும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அந்த வகையில் தேசியவாத காங்கிரஸ்- சரத்சந்திர பவார் கட்சித் தலைவர் சரத் பவார் மற்றும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே உள்ளிட்ட தலைவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
