தமிழகத்தில் ஊராட்சி தேர்தல் ரத்து? அடுத்த 6 மாதத்திற்கு தேர்தலே கிடையாது -தவெக அரசு உத்தரவின் பின்னணி – tamil nadu panchayat elections postponed special officer exceed six months tngovt order

தமிழகத்தில் ஊராட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து ஆளும் தவெக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கடந்த அக்டோபர் 19ஆம் தேதி இதற்கான அரசாணையைப் பிறப்பித்துள்ளார்.

இதன்படி, அக்டோபர் 20, 2026 முதல் ஏப்ரல் 19, 2027 வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி அமைப்புகளின் நிர்வாகப் பொறுப்புகளைத் தனி அலுவலர்கள் கவனிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சித் தேர்தல் தள்ளிப்போனது ஏன்?

தமிழகத்தில் முதல் கட்டமாக 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2025 ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, அங்கு தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இரண்டாம் கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் ஊராட்சி அமைப்புகளின் பதவிக்காலம்அக்டோபர் 19ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முன்பாக நிர்வாக மற்றும் சட்டரீதியான பணிகளை முடிக்க வேண்டியிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. 46 கிராம ஊராட்சிகள் நகராட்சி மற்றும் மாநகராட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 93 புதிய கிராம ஊராட்சிகளும் 9 புதிய ஊராட்சி ஒன்றியங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும் தேர்தல் தாமதத்திற்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் வசம் செல்லும் நிர்வாகம்

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ன் பிரிவு 261-A-ன் கீழ் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கிராம ஊராட்சிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர்கள் மற்றும் தணிக்கை உதவி இயக்குநர்களும், மாவட்ட ஊராட்சிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அல்லது கூடுதல் ஆட்சியரும் தனி அலுவலர்களாகச் செயல்படுவார்கள்.

புதிதாக உருவாக்கப்பட்ட 93 கிராம ஊராட்சிகள் மற்றும்9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இந்த உத்தரவுபொருந்தாது.

அரசியல் ரீதியாக எழும் கேள்விகள்

உள்ளாட்சித் தேர்தல் என்பது கிராமப்புற மக்களின் நேரடி ஜனநாயகப் பங்கேற்பை உறுதிப்படுத்தும் முக்கியமான தேர்தலாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் நிர்வாகம் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தொடர்வது, உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் மக்களின் பிரதிநிதித்துவம் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறது. அதேநேரம், வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீட்டுப் பணிகளை முறையாக முடித்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது கவனிக்கதக்கது. இந்த நீட்டிப்பைத் தொடர்ந்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தாமதம் அரசியல் கட்சிகளின் கிராமப்புறத் தேர்தல் வியூகங்களையும் பாதிக்கக்கூடும். இருப்பினும், அடுத்த தேர்தலுக்கான உறுதியான தேதி அறிவிக்கப்படாத நிலையில், வார்டு மறுவரையறை மற்றும் நீதிமன்ற வழக்கின் நிலை ஆகியவை தேர்தல் நடத்தப்படும் காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Source link