தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது: பீயூஷ் கோயல் குற்றச்சாட்டு

சென்னை: ”தமிழகத்தில் வீடுகளுக்கு குழாயில் குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதில் அமைச்சர்கள், முதல்வருக்கு தொடர்பு இருக்கிறதா என, விசாரணை நடக்கிறது,” என, மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பீயூஷ் கோயல் தெரிவித்தார்.

சென்னை கமலாலயத்தில் நேற்று, பா.ஜ., நிறுவன தினம் கொண்டாடப்பட்டது. இதில், அமைச்சர் பீயூஷ் கோயல் பங்கேற்று, கட்சி கொடி ஏற்றினார்.

பீயூஷ் கோயல் அளித்த பேட்டி: மத்திய அரசின் திட்டங்கள், தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு, 9 லட்சம் வீடுகள் கட்டித் தர, மத்திய அரசு நிதி ஒதுக்கியது. ஆனால், 3 லட்சம் பயனாளிகளுக்கு, இதுவரை வீடுகள் ஒதுக்கப்படவில்லை. இந்த வீடுகளை ஒதுக்கி இருந்தால், 13 லட்சம் மக்கள் துாய்மையான குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி போன்ற வசதிகளுடன் பயன் அடைந்திருப்பர்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கையால், கடந்த, 10 ஆண்டுகளில், தமிழகத்திற்கு கிடைத்த வரி வருவாய், தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கிடைத்ததை விட, இரு மடங்கு அதிகம்; அந்த நிதி எங்கே சென்றது? மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால், தமிழகத்தில் பல திட்டங்களை செயல்படுத்தி இருக்கலாம். அவர் தன் மகன் உதயநிதியை முதல்வராக்க விரும்புகிறார்.

மத்திய அரசு ஒதுக்கிய நிதி தொடர்பான அரசு ஆவணங்கள், பொது வெளியில் உள்ளன. தமிழகத்தில் வீடுகளுக்கு குழாயில் துாய்மையான குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து, விசாரணை நடக்கிறது.

இதில் அமைச்சர்கள், முதல்வருக்கு தொடர்பு இருக்கிறதா என, விசாரணை நடக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த ஊழல்களுக்கு அமைச்சர்களும், முதல்வரும் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link