சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.
அதில், அவர் பேசியதாவது:
தி.மு.க., தலைமையகமான அறிவாலயத்தில் கடந்த 2011ல், ஒரு மாடியில் சி.பி.ஐ., ‘ரெய்டு’ நடந்தது. மற்றொரு மாடியில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. அன்று முதல் இன்று வரை காங்கிரசுக்கு தி.மு.க., அடிமையாக தான் உள்ளது. மற்ற கட்சிகளுக்கு ‘சீட்’ பேரம் பேசிய தி.மு.க., – காங்.,கிற்கு மட்டும் கேட்ட தொகுதிகளை கொடுத்துள்ளது.
பாலியல் குற்றங்களில் அதிக அளவில் ஈடுபட்டது, தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் தான். இதற்கு, தமிழகத்தில் கஞ்சா, மது போதை பொருட்கள் புகையிலை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்தது தான் காரணம்.
கடந்த 2022-ல் இருக்கன்குடி ஊராட்சி தலைவராக இருந்த தி.மு.க.,வைச் சேர்ந்தவரின் மகன், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவரை கைது செய்யக் கோரி, சிறுமியின் தாய் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.
அதன் பிறகே வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
அதே ஆண்டு விருதுநகரில் தி.மு.க., இளைஞரணியினர் மூன்று பேர், இளம்பெண்ணை 8 மாதம் அறையில் பூட்டி வைத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க.,வைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா வெளிநாடுகளுக்கு போதை பொருள்கள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர், விருதுநகர் மாவட்டத்துக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. நயினார் நாகேந்திரன் நேரடியாக பிரதமர் மோடியிடம் பேசுவார்; பழனிசாமியிடமும் பேசுவார்.
எனவே, சாத்துார் தொகுதி மத்திய, மாநில அரசுகளின் நிதி பெற்று, வளம் பெற்ற பூமி ஆக மாறும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
