சென்னை: தமிழக சட்டசபைக்கு நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், மாநிலம் முழுதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டசபை தேர்தல் தேதியை, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் நேற்று மாலை அறிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தலைமை செயலகத்தின் நுழைவு வாயிலில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், பொதுமக்கள் பார்வைக்கு நேற்று வைக்கப்பட்டிருந்த முதல்வர் நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.
தலைமை செயலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களில் இருந்தும், முதல்வரின் படங்கள் அகற்றப்பட்டன. சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், அரசியல் தலைவர்களின் படங்களை அகற்றும் பணியும் துவக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது. புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டக்கூடாது. அரசு நிதியில் புதிய உதவிகளை செய்ய முடியாது.
அரசு செலவில் விளம்பரங்கள் செய்யக்கூடாது. அரசு வாகனங்களை, அரசு அலுவலகங்களை, தேர்தல் பணிக்கு பயன்படுத்தக்கூடாது. ஆனால், வழக்கமான அரசுப் பணிகளை மேற்கொள்ளலாம். ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசு திட்டங்களை நிர்வகிக்கலாம்.
