தமிழகத்தில் தொழிலா… யோசிக்க வைக்கும் அரசியல்!

அதிக தொழில் வளர்ச்சி பெற்ற இந்திய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இங்குள்ள ஆலைகள், உலக சந்தைக்கான வாகனங்களை தயாரிக்கின்றன. நாம் தயாரித்த ஆடைகள் கிட்டத்தட்ட எல்லா கண்டங்களிலும் அணியப்படுகின்றன. பொறியியல் பொருள்கள் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லாம் இங்குதான் தங்களது சாதனங்களை தயாரிக்கின்றன.

2025 – 26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையின்படி, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.20 சதவீதமாக உள்ளது. இது, இந்தியாவிலேயே மிக அதிகம். உற்பத்தி துறை 14.74 சதவீதம் விரிவடைந்துள்ளது. இது, தேசிய சராசரியை போல் மூன்று மடங்குக்கும் மேல்.Image 1552605தொழிலக வேலைவாய்ப்பிலும் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. நம் நாட்டின் 7ல் ஒரு தொழிற்சாலை பணியாளர், இம்மாநிலத்தில் தான் பணியாற்றுகிறார். தமிழக பொருளாதாரத்தில், தொழில்துறை கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது.

இப்படி, மாநிலத்தில் தொழில்துறை என்ன தான் பல சாதனைகளை செய்து கொண்டிருந்தாலும், அரசியல் அரங்கில் ஒலிக்கும் குரல்களை கேட்டால், இதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் இ ருக்கும்.

அரசியலை பொறுத்தவரை, இங்கு தொழிற்சாலைகள் வில்லன்களாக தான் பார்க்கப்படுகின்றன. தொழிலக விரிவாக்கம் என்பது விவசாயிகள், நிலம், நீர், அடையாளத்துக்கு எதிரான தாக்குதலாக காட்டப்படுகின்றன.

தமிழகத்தின் ஒவ்வொரு தேர்தல் பிரசார மேடைகளிலும், மாநில வளர்ச்சியில் தொழில்துறையின் பங்களிப்பு குறித்து பேசப்படுவதில்லை. அது கூட பரவாயில்லை, அது ஏதோ தமிழகத்தை கெடுக்க வந்த எதிரிபோல பேசப்படுகிறது.

போராட்ட அரசியல்

கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்தில் பெரிய தொழிற்சாலை மற்றும் உள்கட்டமைப்புகளை அமைப்பதற்கு எதிரான பல தீவிர போராட்டங்கள் நடைபெற்றுள் ளன.

கடந்த 2018ல், துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் இதில் குறிப்பிடத்தக்கது. இதில், போலீசார் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தது, இந்த விவகாரத்தை பெரிய அரசியல் பிரச்னையாக்கியது. கடைசியில், அந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது.

விளைவு, இந்தியாவின் மிகப்பெரிய காப்பர் ஆலையான ஸ்டெர்லைட் முடங்கியதால், தமிழகத்தின் ஜி.டி.பி.,க்கு கிட்டத்தட்ட 14,749 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதுவரை காப்பர் ஏற்றுமதி நாடாக இருந்த இந்தியா, அதற்கு பின்னர் காப்பரை இறக்குமதி செய்யும் நாடாக மாறியது.

தமிழக வளர்ச்சி திட்டங்களின் நிலைமையை வெளிச்சம் போட்டு காட்டும் இன்னொரு உதாரணம், சென்னை – சேலம் எட்டுவழி சாலை திட்டம். வடக்கு மற்றும் தெற்கு தொழில் மையங்கள் இடையே இணைப்பை ஏற்படுத்தி, தொழில் வளர்ச்சியை விரைவாக்கும் நோக்கில் துவக்கப்பட்ட அந்த திட்டம், கடுமையான போராட்டத்தால் முடக்கப்பட்டது.

‘தகாத’ வார்த்தை

எட்டுவழி சாலை மட்டுமல்ல, தமிழகத்தில் எந்த வளர்ச்சி திட்டம் கொண்டுவரப்படுவதாக கூறினாலும், அது தகாத வார்த்தையாக பார்க்கப்படுகிறது. இதற்கு இன்னும் ஒரு உதாரணம், பரந்துார் பசுமை விமான நிலைய திட்டம்.

இந்த திட்டத்துக்காக, சந்தை விலையைவிட மூன்றரை மடங்குக்கும் மேல் நிலத்துக்கு பணம் வழங்க அரசு முன்வந்தது. இருந்தாலும், இந்த திட்டம் உள்ளூர் மக்களின் அடையாளத்தையும், விவசாயத்தையும் அழிப்பதற்காக யாரோ வேண்டுமென்றே கொண்டு வந்த திட்டம் போல் கொந்தளிப்பு எழுந்ததால், இதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதே போல், திருவண்ணாமலையில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கம், காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டம் என, தீவிர எதிர்ப்பு காரணமாக தேக்கமடைந்துள்ள பல திட்டங்கள் உள்ளன.

கோபத்துக்கான காரணம்

இப்படி பொருளாதாரத்துக்கு கணிசமான பங்களிப்பை வழங்கி, லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினாலும், தொழில்துறை மீது தமிழகம் காட்டும் கோபத்துக்கு காரணம் இருக்கிறது.

பல நுாற்றாண்டுகளாகவே இங்கு விவசாயத்துக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருக்குறள் கூட, ‘உழுது வாழ்பவர்கள்தான் உண்மையில் வாழ்பவர்கள்; மற்றவர்கள் எல்லாம் அவர்களை சார்ந்து வாழ்பவர்கள்’ என்கிற அளவுக்கு விவசாயத்தை துாக்கி பிடிக்கிறது.

தொழில்துறை என்பது 19ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில், அல்லது 20ம் நுாற்றாண்டின் முற்பகுதியிலேயே தமிழகத்துக்கு வந்துவிட்டாலும், விவசாய துறை அளவுக்கு அது ஆராதிக்கப்படவில்லை.

திரைப்படங்களிலும், விவசாயி பாவப்பட்டவராகவும், தொழில் அதிபர் அல்லது மில் முதலாளி கொடூரமானவராகவும் சித்தரிக்கப்படுவது, மக்கள் மனதில் தொழிலதிபர்களுக்கு எதிரான கருத்தை ஆணி அடித்து வைத்திருக்கிறது.

அதனால்தான், குஜராத் போன்ற பிற மாநிலங்களில் இருப்பதை போல், அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்களுக்கு இணையாக தமிழகத்தில் தொழில் அதிபர்கள் போற்றப்படுவதில்லை. இந்த நிலை தொடர்ந்தால், மாநிலங்களுக்கு இடையிலான தொழில் போட்டியில் தமிழகம் எதிர்காலத்தில் பின் தங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Source link