தமிழகத்துக்கு பார்லிமென்ட் நிலைக்குழு பாராட்டு

– நமது சிறப்பு நிருபர் –

தோல் தொழில்துறையில் முன்மாதிரியாக விளங்கும் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சிறப்பாக செயல்படுவதாக, பார்லிமென்ட் நிலைக் குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

முன்மாதிரி

திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., டோலா சென் தலைமையிலான வர்த்தகத்திற்கான பார்லிமென்ட் நிலைக்குழு, சமீபத்தில் மூன்று அறிக்கைகளை பார்லிமென்டில் தாக்கல் செய்தது. மொத்தம் 52 பக்கங்களை கொண்ட அறிக்கைகளில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள தோல் தொழில்துறையில், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடு சிறப்பாக அமைந்துள்ளன. தமிழகத்தில் திருச்சி மற்றும் பெருந்துறையில் உள்ளவற்றை தவிர, மீதமுள்ள 13 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் சிறப்பாக செயல் படுகின்றன.

மேற்கு வங்கத்தில் செயல்படும் ஒரே சுத்திகரிப்பு நிலையமும் சிறந்த முறையில் இயங்குகிறது. தோல் தொழில் துறையிலும், சுத்திகரிப்பு நிலையங்களை பராமரிக்கும் விஷயங்களிலும் இந்த இரு மாநிலங்களும் முன்மாதிரியாக விளங்குகின்றன.

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைமுறையில் உள்ள, ‘தேசிய ஒற்றைச் சாளர முறை’ தோல் துறையில் தொழில் செய்வதை எளிதாக்கிஉள்ளன. இதன் விளைவாக, இந்த துறை செழித்து வளர்வதுடன், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏற்றுமதிக்கு பங்களித்து வருகிறது.

பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறம்பட செயல்படுவதற்கு தேவையான ஒப்புதல்களை, சரியான நேரத்தில் பெற்றுத் தர ஒற்றைச் சாளர முறை உதவுகிறது. சிறப்பாக செயல்படும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், தொழிற்சாலை கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பதை உறுதி செய்வதுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவுகிறது.

பரிந்துரை

எனவே, பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் சீரான செயல்பாட்டிற்கு துணைபுரியும் வகையில், அனைத்து மாநிலங்களிலும் திறமையான ஒற்றைச் சாளர முறையை நடைமுறைப்படுத்துவதற்கு ஊக்குவிக்குமாறு, அத்துறை சார்ந்த அமைச்சகத்துக்கு குழு பரிந்துரைக்கிறது.

இந்த விவகாரத்தில், பிற மாநிலங்கள், தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தை பின்பற்ற வேண்டும். இது, தொழில்துறை வளர்ச்சியையும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும் சமநிலைப்படுத்த உதவும். இவ்வாறு அறிக்கை களில் கூறப்பட்டு உள்ளது.

Source link