தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் 2ஆம் கட்டத் தேர்தல் பிரச்சாரப் பயணத் திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, அதிமுக மற்றும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் இந்தப் பிரச்சாரப் பயணம் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதன்படி, ஏப்ரல் 2ம் தேதி வியாழக்கிழமை மதியம் 3 மணிக்கு தர்மபுரியிலும், மாலை 5 மணிக்கு கிருஷ்ணகிரியிலும் தனது பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார். அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 3ம் தேதி மதியம் 3 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடியிலும், மாலை 5 மணிக்கு வேலூரிலும் தேர்தல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார். ஏப்ரல் 4ம் தேதி சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணியிலும், மாலை 5 மணிக்கு விழுப்புரத்திலும் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
ஏப்ரல் 5-ம் தேதி புதுச்சேரி மற்றும் கடலூரிலும், ஏப்ரல் 6-ம் தேதி பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி (உளுந்தூர்ப்பேட்டை) தொகுதிகளிலும் அவர் வாக்குச் சேகரிக்கிறார். ஏப்ரல் 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சேலம் மாவட்டத்தின் வாழப்பாடி, கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் ஆகிய பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு தொகுதிகளில் அவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 10-ம் தேதி காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரிலும், ஏப்ரல் 11ஆம் தேதி தஞ்சாவூர் மற்றும் திருவாரூரிலும் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
ஏப்ரல் 12-ம் தேதி நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை (செம்பனார்கோவில்) பகுதிகளிலும், ஏப்ரல் 13ஆம் தேதி திருச்சி மற்றும் திண்டுக்கல்லிலும் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார். ஏப்ரல் 14ஆம் தேதி தேனி (ஆண்டிபட்டி) மற்றும் மதுரையிலும், ஏப்ரல் 15ஆம் தேதி கரூர் மற்றும் திருப்பூரிலும் பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். இறுதியாக ஏப்ரல் 16ஆம் தேதி வியாழக்கிழமை கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். இந்தப் பயணத் திட்டத்தின்படி ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3 மணி மற்றும் மாலை 5 மணி அளவில் முக்கியப் பொதுக்கூட்டங்கள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 17ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு தொகுதிகளில் அவர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகிறார். அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 18ஆம் தேதி மதியம் 3 மணிக்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலும், மாலை 5 மணிக்கு ஈரோட்டிலும் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார். பிரச்சாரத்தின் நிறைவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி மீண்டும் சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் தனது இறுதிக்கட்டச் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் இந்தப் பிரச்சாரப் பயணம் அக்கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்த அறிவிப்பு அக்கட்சியின் தொண்டர்களிடையே தேர்தல் பணிகளை மேலும் வேகப்படுத்தியுள்ளது.
