சென்னை:தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர பிரிவில் தொழில் துவங்க, மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்வது, ‘உதயம்’ தளத்தில் பதிவு செய்வது உள்ளிட்ட அனைத்து சேவைகளையும், மொபைல் செயலி வாயிலாகவே வழங்கும் வசதியை, தமிழக அரசு ஏற்படுத்த உள்ளது.
தமிழகத்தில் உள்ள இளைஞர்களை தொழில்முனைவோராக்க, புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயல்படுத்துகிறது.
இத்திட்டங்களுக்கு, மானியத்துடன் கூடிய கடனுதவி, வங்கிகள் வாயிலாக வழங்கப்படுகிறது.
இதற்கு, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விரைவில், மொபைல் செயலி வாயிலாகவே நிறுவனங்கள் விண்ணப்பம் செய்யவும், சேவைகளை பெறவும் முடியும். இதற்கான பணிகளை, சிறு, குறு, நடுத்தர துறையின், ‘பேம் டி.என்’ நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
