தமிழக கப்பல் கட்டுமான கொள்கை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை : தமிழகத்தில் கப்பல் கட்டும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க ஊக்குவிப்பு சலுகைகள் அடங்கிய, ‘தமிழக கப்பல் கட்டுமான கொள்கை – 2026’ஐ முதல்வர் ஸ்டாலின், சென்னையில் நேற்று வெளியிட்டார்.

கப்பல் கட்டுமானத்தில் தமிழகத்தை உலகளவில் முன்னணி மாநிலமாக நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், கப்பல் கட்டுமான கொள்கை வெளியிடப்பட்டு உள்ளது.

கப்பல் கட்டுமானம், வடிவமைப்பு, பழுதுபார்த்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில், முழுதுமான கடல்சார் தொழில் சூழலை உருவாக்குவது, இந்த கொள்கையின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.

கப்பல் கட்டுமான தளம், பசுமை கப்பல் மறுசுழற்சி, கப்பல் உதிரிபாகங்கள் உற்பத்தி போன்ற துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், இக்கொள்கை விரிவான ஊக்குவிப்பு கட்டமைப்பை வழங்குகிறது.

முதலீட்டில் பங்களிப்பு, சொத்து குத்தகை, மூலதன மானியம், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைகள் ஆகியவற்றுடன் அமைப்பு முறையிலான ஊக்க தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தங்களுக்கு இணங்க செயல்படும் சான்றளிக்கப்பட்ட மறுசுழற்சி நிலையங்களுக்கு மூலதன மானியம் வழங்கப்படும்; கப்பல் உதிரிபாகங்கள் தயாரிப்பு துறைக்கு, வளர்ந்து வரும் துறைக்கான சிறப்பு அங்கீகாரம் வழங்கி, தமிழக தொழில் கொள்கையின் கீழ் சலுகைகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

‘உலக தரமான கப்பல்களை தமிழகம் உருவாக்கும்’ தொழில் துறை அமைச்சர் ராஜா அறிக்கை: ‘சிப்காட்’ நிறுவனம் இணைந்து அமைக்க உள்ள கப்பல் கட்டும் தளம் வாயிலாக பெரிய வணிக கப்பல், போர் கப்பல், நீர்மூழ்கி கப்பல், பசுமை கப்பல்கள் மற்றும் கடல்சார் கட்டமைப்புகளின் கட்டுமானத்தை ஆதரிக்க கூடிய உலகத்தரம் வாய்ந்த கப்பல் கட்டும் குழுக்களை தமிழகம் உருவாக்கும். உலகளாவிய கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் கடல்சார் உற்பத்தியாளர்களை ஈர்க்க, இந்த கொள்கை கட்டமைக்கப்பட்ட சலுகைகளை அறிமுகம் செய்கிறது. தமிழகம் எப்போதும் கடல்சார் மாநிலமாக உள்ளது. சோழர் காலம் முதல் நவீன உலகளாவிய வர்த்தகம் வரை தமிழக கடற்கரை, நம்மை உலகத்துடன் இணைத்துள்ளது.

Source link