சென்னை: தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு, பழங்கால கோவில், கல் துாண்கள் கடத்தப்பட்டது தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு, விஷ்ணு, கருடர், முனிவர் மற்றும் அலங்கரிக்கப்பட்ட அன்னம் என, அழைக்கப்படும் ஹம்ச பறவை செதுக்கப்பட்ட கல் துாண்கள் கடத்தப்பட்டு இருப்பது, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
இக்கல் துாண்கள், 18 அல்லது 19ம் நுாற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என, ஆய்வின் அடிப்படையில், போலீசார் முடிவுக்கு வந்துள்ளனர்.
இக்கல் துாண்கள், தமிழக கோவில்களில் திருடப்பட்டு, ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டுள்ளது என, அந்நாட்டு அதிகாரிகளுக்கு, இந்திய துாதரக அதிகாரி தேவி கோபிநாத் வாயிலாக, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்கால கோவில் கல் துாண்கள் திருடி, கடத்தப்பட்டது தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த, 6ம் தேதி சென்னை – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், மாருதி சுசூகி எர்டிக் காரில், விஷ்ணு மற்றும் தேவி, பழங்கால உலோகச் சிலைகளை கடத்திய, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, அதே மாவட்டத்தை சேர்ந்த முகிலன், ஜான்சன் ஆகியோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
