தமிழக பல்கலைகளில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து முதல்வருக்கு மாற்ற வகை

தமிழக பல்கலைகளில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து முதல்வருக்கு மாற்ற வகை செய்யும் தமிழக அரசின் சட்டங்களை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. மேலும், இவ்வழக்கை மீண்டும் புதிதாக விசாரித்து ஆறு வாரத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுதும் உள்ள பல்கலைகளில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் கவர்னரிடம் இருந்தது. இந்த அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றுவது, பல்கலை வேந்தராக மாநில முதல்வரை நியமிப்பது உள்ளிட்ட 10 முக்கிய மசோதாக்களை தமிழக அரசு நிறைவேற்றியது.

மேல்முறையீடு

இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், கவர்னர் இழுத்தடித்து வருவதாக கூறி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த ‘சட்டங்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதப்படும்’ என கூறியது. இதையடுத்து, தமிழக அரசு இந்த சட்டங்களை அரசிதழில் வெளியிட்டது.

மேலும், பல்கலைகளில் துணை வேந்தர்களை நியமிக்கும் பணியிலும் தமிழக அரசு மும்முரம் காட்டியது. இந்தச் சூழலில், பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி, இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வில் இவ்வழக்கு பட்டியலிடப்பட்டது. கடந்த ஆண்டு மே 21ம் தேதி, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, வழக்கத்திற்கு மாறாக இரவு 7:00 மணி வரை இவ் வழக்கை விசாரித்தது.

அப்போது, வெங்கடாஜலபதி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்திருப்பதாகவும், எனவே, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கூடாது எனவும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை கவர்னரிடம் இருந்து முதல்வருக்கு மாற்ற வகை செய்யும் தமிழக அரசின் சட்டங்களை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டனர்.

இதையடுத்து, தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் பஞ்சோலி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

நிர்வாக பாதிப்பு

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் பி.வில்சன் ஆகியோர், வாதங்களை முன்வைத்தனர்.

‘துணை வேந்தர்கள் நியமன அதிகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இருந்தபோதிலும், உயர் நீதிமன்றத்தின் கோடைக்கால சிறப்பு அமர்வு, அவசரகதியில் விசாரணையை நடத்தி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

‘தமிழக அரசு பதில் அளிப்பதற்கு கூட அவகாசம் தரப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவால், 16 பல்கலைகளின் நிர்வாகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ என வாதிட்டனர்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

முக்கிய வழக்கை உயர் நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை அமர்வு பட்டியலிட்டு விசாரணை நடத்தியது ஏன்? ஒரே நாளில் இந்த வழக்கில் எப்படி தீர்வு காண முடியும்? உயர் நீதிமன்றம் இவ்வழக்கை ஏன் அவசரமாக விசாரித்தது? தமிழக அரசு பதில் அளிக்கக்கூட அவகாசம் தராதது ஏன்?

மீண்டும் விசாரியுங்கள் இவ்வழக்கில், உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறை ஏற்கும்படியாக இல்லை.

எனவே, துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை கவர்னரிடம் இருந்து முதல்வருக்கு மாற்ற வகை செய்யும் தமிழக அரசின் சட்டங்களை நிறுத்தி வைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்கிறோம்.

இவ்வழக்கை மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும். இதற்காக உரிய அமர்வை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமைக்க வேண்டும். அடுத்த ஆறு வார காலத்திற்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

‘சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிக்கும் வரை, இடைப்பட்ட காலத்தில் பல்கலைகளில் துணை வேந்தர்களை நியமிக்க மாட்டோம்’ என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

– டில்லி சிறப்பு நிருபர் –

Source link