சென்னை: தமிழக பா.ஜ.,வில் அமைப்பு பொதுச்செயலர் நியமனம், இப்போதைக்கு வேண்டாம் என ஆர்.எஸ்.எஸ்., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.,வில் தேசிய, மாநில அளவில் அமைப்பு பொதுச்செயலர் என்ற பதவிகள் உள்ளன. தேசிய தலைவர், மாநில தலைவர் பதவிக்கு இணையான இப்பொறுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கட்சியின் அமைப்பு பணிகள், அறக்கட்டளைகள், நிதி விவகாரம் அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
திருமணம் ஆகாதவர்
இப்பொறுப்புகளில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அனுபவம் வாய்ந்த முழு நேர ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். பா.ஜ.,வே இப்பொறுப்புக்கு ஒருவரை நியமித்தாலும், அவர் திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும். இப்பொறுப்பில் இருப்பவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது. மற்ற அரசியல் தலைவர்களை போல தங்களை முன்னிறுத்திக் கொள்ளக்கூடாது.
ஆர்.எஸ்.எஸ்., மாநில இணை அமைப்பாளராக இருந்த இல.கணேசன், தமிழக பா.ஜ., முதல் அமைப்பு பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். 2003ல் அவர் தேர்தலில் போட்டியிட விரும்பியதால், பா.ஜ., மாநில இளைஞரணி தலைவராக இருந்த மோகன்ராஜுலு, அமைப்பு பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், 12 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்த அவர், திருமணம் செய்து கொண்டதால், ஆர்.எஸ்.எஸ்., மாநில அமைப்பாளராக இருந்த கேசவவிநாயகன், 2015ல் பா.ஜ.,வுக்கு அனுப்பப்பட்டார்.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அவர் மீண்டும் ஆர்.எஸ்.எஸ்., பணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதனால், பா.ஜ., அமைப்பு பொதுச்செயலர் பதவி காலியாகி உள்ளது.
நுாற்றாண்டு பணி
இது பற்றி, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
இது, ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா என்பதால், பல்வேறு செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், நுாற்றாண்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் குறைந்தது, 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்கள், அரசியல் அமைப்பு பணிகளில் திறன் உள்ளவர்களை தான், பா.ஜ., அமைப்பு பொதுச்செயலர் பணிக்கு அனுப்ப முடியும். இப்போது, அப்படி திறன் உள்ளவர்கள் அதிகம் வேண்டும் என பா.ஜ., கேட்கிறது.
ஆனால், அதை நிறைவேற்ற முடியாத இடத்தில் ஆர்.எஸ்.எஸ்., உள்ளது. அதனால் தான் ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, சிக்கிம், மேகாலயா, மிசோரம், அருணாச்சல பிரதேசம், புதுச்சேரி, கோவா ஆகிய மாநிலங்களில், பா.ஜ.,வுக்கு அமைப்பு பொதுச்செயலர்கள் இல்லை.
எனவே, தமிழகத்திலும் இப்போதைக்கு அமைப்பு பொதுச்செயலர் நியமிக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு கூறினார்.
