தமிழக வீரர் தேசிய சாதனை * போல் வால்ட் போட்டியில்

புவனேஸ்வர்: தேசிய உள்ளரங்கு போல் வால்ட் போட்டியில் தமிழகத்தின் ரீகன் தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார்.

இந்தியாவில் முதன் முறையாக, தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடந்தது. நேற்று இரண்டாவது, கடைசி நாள் போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான போல் வால்ட் போட்டி நடந்தது. தமிழகத்தின் ரீகன் கணேசன், 5.30 மீ., உயரம் தாவி, புதிய தேசிய சாதனை படைத்து, தங்கம் கைப்பற்றினார். ராம்பீர் சிங் (4.85), பினீஷ் ஜேக்கப் (4.55) அடுத்த இரு இடம் பெற்றனர்.

இதற்கு முன்…

முன்னதாக, உள்ளரங்கு போட்டியில் 2009ல் பிமின், 4.80 மீ., தாவி இருந்தார். தவிர, தேவ் மீனா (5.40 மீ.,), சிவ சுப்பிரமணிக்கு (5.31) அடுத்து, போல் வால்ட் போட்டியில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய மூன்றாவது இந்திய வீரர் ஆனார் ரீகன் (5.30).

ஆண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டியில் தமிழகத்தின் ராபின்சன் (14.67 மீ.,) இரண்டாவது இடம் பெற்று, வெள்ளி வென்றார். பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் மூன்றாவது வாய்ப்பில் 1.71 மீ., தாவிய தமிழக வீராங்கனை கெவினா, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். முதல் வாய்ப்பில் அசத்திய குஜராத்தில் பயல் (1.71) தங்கம் வென்றார்.

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் சாய் சிந்தனா (59.96 வினாடி) தங்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் உ.பி.,யின் சலோனி குமாரி (53.73) தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார். 21 ஆண்டுக்கு முன் பின்கி பிராமனிக் (53.89) முதலிடம் பெற்றிருந்தார். ஆண்களுக்கான 60 மீ., ஓட்டத்தில் பஞ்சாப்பின் குரிந்தர்விர் சிங் (6.60 வினாடி), தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார்.

காமன்வெல்த் தகுதி

காமன்வெல்த் விடளயாட்டு போல் வால்ட் போட்டியில் பங்கேற்க 5.25 மீ., உயரம் தாவ வேண்டும். தற்போது 5.30 மீ., உயரம் தாவியதால் ரீகன், காமன்வெல்த் விளையாட்டில் (கிளாஸ்கோ, ஜூலை 23-ஆக. 2) பங்கேற்க தகுதி பெற்றார்.

Source link