தமிழர்களின் ஏழ்மை மனப்பான்மை : எழுத்தாளர் அராத்து,

தமிழக அரசிய கட்சிகள், தமிழகத்தை, ‘இந்தியாவின் முதன்மையான மாநிலம், விரைவில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும்’ என்பர். ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை பார்த்தால், தமிழகம் ஏழைகள் நிறைந்த மாநிலம் என்று தான் தோன்றும்.

ஆனால்,உண்மையில் மக்கள் ஏழ்மை மனநிலையில் இருக்கின்றனர்.

ஏழ்மை மனநிலை என்றால் என்ன? எவ்வளவுதான் சம்பாதித்தாலும், எவ்வளவு சொத்து சேர்த்திருந்தாலும், அரசு 5,000 ரூபாய் தருகிறது என்றவுடன் கூச்சமே இல்லாமல் காரில் போய் இறங்கி, அதை வாங்க வரிசையில் நிற்பதற்குப் பெயர்தான் ஏழ்மை மனநிலை.

தமிழக அரசியல் கட்சிகள், தொடர்ந்து ஏழ்மை அரசியல் செய்து, செய்து மக்களை இந்த ஏழ்மை மனநிலைக்கு பழக்கப்படுத்தி வைத்திருக்கின்றன. ஊறிப்போன ஏழ்மை மனநிலையால் என்ன நடக்கிறது?

 ஒரு பக்கம், தமிழ் சமூகம், வளர்ச்சி அடைந்த, மேம்பட்ட சமூகம் என சொல்லிக் கொண்டு, மறுபக்கம், பணம் கொடுத்துதான் ஓட்டு வாங்க வேண்டும் என்று கூச்ச நாச்சம் இல்லாமல் அரசியல் கட்சிகள் பேசுகின்றன; பணம் வாங்கிக் கொண்டுதான் ஓட்டு போடுவேன் என வாக்காளர்களும் வெட்கமே இல்லாமல் இருக்கின்றனர்

 கட்சிகளின் வாக்குறுதிகள் மட்டும் அல்ல, அரசின் செயல்பாடும் மிடில் கிளாஸ் தேவைகளை பூர்த்தி செய்வதாக இல்லாமல் போய்விடுகிறது. உதாரணமாக கல்வியை எடுத்துக் கொள்வோம். தரமான உயர் கல்வி, மிடில் கிளாஸின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்று.

அரசு கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. மாதம் 25,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஊழியர்களை வைத்து சமாளித்து வந்தனர். இப்போது, ஆட்சி முடியும் தறுவாயில், அந்த பணியிடங்களுக்கான தேர்வை நடத்தி இருக்கின்றனர்.

ஒரு சின்ன கணக்கை பார்ப்போம்.மகளிர் உரிமை தொகை, தலா 1,000 ரூபாய் வீதம், ஒரு கோடியே 31 லட்சம் பேருக்கு, மாதா மாதம் கொடுக்கப்படுகிறது.

1.31 கோடி x ரூ.1000 = ரூ.1,310 கோடி மாதா மாதம் செலவு.

இதுவே, 2,000 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்தால் அவர்கள் சம்பளம், ஒரு கணக்குக்காக, மாதம் ஒரு லட்சம் ரூபாய் என வைத்துக் கொள்வோம்.

2,000 x ரூ.ஒரு லட்சம் = ரூ.20 கோடி மட்டுமே மாதா மாதம் செலவு!

போட்டி தேர்வு வைத்து எடுக்கப்படுவதால், இவர்கள் தகுதியான, தரமான, திறமையானவர்களாக இருப்பர். அரசு கல்லுாரிகளில் பயிலும் நம் பிள்ளைகள் நல்ல தரமான உயர் கல்வியை பயில முடியும். இதனால் மாநிலத்துக்கும் மக்களுக்கும் நீண்ட கால பலன் கிடைக்கும். இது ஒரு உதாரணம் தான்.

அரசியல்வாதிகளுக்கு இது எளிமையானது. 1,310 கோடி ரூபாய் கொடுத்தால் நேரடியாக ஓட்டாக கிடைக்கும் என்பது அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. பரிவர்த்தனையாக முடிந்துவிடுகிறது.

இதில் கவனம் செலுத்தும் அரசு, வளர்ந்த மாநிலமாக்க தேவையான சேவைகளிலும் கட்டமைப்புகளிலும் இருந்து, பணத்தை மடை மாற்றிவிடும். உதவி பேராசிரியர்களை போல, மெல்ல மெல்ல மற்ற அரசு சேவைகளும் காவு வாங்கப்படும்.

அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆள் பற்றாக்குறை என சொல்கின்றனர். அது மக்களின் வாழ்க்கை தரத்தை தான் பாதிக்கும்.

இதன் விளைவுகளை இப்போதே பார்த்து வருகிறோம்.

 கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னால், நீண்ட துாரப் பேருந்து போக்குவரத்தில் தமிழகம் தான் முன்னணியில் இருந்தது. ஆனால், இப்போது, தமிழர்களே அண்டை மாநில அரசு பேருந்துகளில் தான் டிக்கெட் தேடுகின்றனர்

 தென் மாநிலங்களுக்கே சென்னை விமான நிலையம் தான் சர்வதேச விமான நிலையமாக இருந்தது. இப்போது ஹைதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்கள் சர்வதேச தரத்தில் உலகுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்க, சென்னை விமான நிலையம் பரிதாபமாக காட்சி அளிக்கிறது.

இன்றைய பலனுக்காக நீண்டகால திட்டங்களை அரசு கைவிடுவதும், நீண்ட கால நலனை மக்கள் கைவிடுவதும் மிடில் கிளாஸ் மட்டுமல்ல ஏழைகளையும் பாதிக்கும். அவர்களை ஏழைகளாகவே வைத்திருக்கும். மிடில் கிளாஸையும் ஏழைகளாக்கிவிடும். ஏழ்மை மனநிலையை கைவிடாத வரை தமிழகம் வளர்ந்த மாநிலமாக மாற முடியாது. ar************@***il.com

Source link