தமிழிசைக்கு எதிர்ப்பு; மாணவி சோபியாவை கைது செய்த போலீசார் மீதான நடவடிக்கை ரத்து

சென்னை: பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை பயணித்த விமானத்தில், கோஷம் எழுப்பிய மாணவியை கைது செய்த போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு சென்ற, ‘இண்டிகோ’ விமானத்தில், கடந்த 2018ம் ஆண்டு, அப்போது தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை பயணித்தார். அந்த விமானத்தில் பயணித்த, ஆராய்ச்சி மாணவி லுாயிஸ் சோபியா என்பவர், மத்திய பா.ஜ., ஆட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினார். இதுதொடர்பாக, விமான நிலைய அதிகாரிகளிடம், தமிழிசை புகார் அளித்தார்.

வழக்குப் பதிவு செய்த, துாத்துக்குடி மாவட்ட போலீசார், மாணவி சோபி யாவை கைது செய்தனர்; பின், அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து, போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறி, சோபியா தந்தை ஏ.ஏ.சாமி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணையம், சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட சோபியாவுக்கு, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் பரிந்துரைத்தது.

அதை எதிர்த்து, அப்போதைய இன்ஸ்பெக்டர் திருமலை, எஸ்.ஐ., லதா, ஏ.டி.எஸ்.பி., பொன்ராமு, சிறப்பு பிரிவு சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் ஜி.பாஸ்கரன், எஸ்.ஐ., நம்பிராஜன் மற்றும் பிரகாஷ் உட்பட ஆறு போலீசார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஷமீம் அகமது அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர் ஆர்.கார்த்திகேயன், ஜெ.ஜெயகுமரன் ஆஜராகினர்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சட்டம் ஒழுங்கை பேண வேண்டிய போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடங்களில் எடுக்கும் உடனடி முடிவுகளை குறை கூற முடியாது. குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து, புலன் விசாரணையில் தான் தெரியவரும்.

எனவே, மாநில மனித உரிமைகள் ஆணையம், தன் வரம்பை மீறி, இணையான விசாரணை நடத்தி, முன் முடிவுக்கு வர முடியாது என்பதால், சோபியாவுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படியும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link