2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே சிறிது காலம் கருத்து முரண்பாடு இருந்து வந்தது. இந்த காலகட்டங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படும். இதனால், காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்று பரவலாகப் பேசப்பட்டது. அதே நேரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் இந்த கருத்தை ஆமோதித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை, கூட்டணி குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வத்தை இடைநீக்கம் செய்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான கூட்டணி பிளவடைந்து, காங்கிரஸ் தவெக வுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. திமுக காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது. இதனால், தவெக தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், தவெக வின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுன், “திமுகவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு சில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணி அமைத்துள்ளனர். அதனால், காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தவெக வில் இணையக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இன்னும் இரண்டு நாட்களில் காங்கிரஸ் நிர்வாகிகள், தவெக வில் இணைய உள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
