இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹாப்பி ராஜ்’. மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீ கவுரி பிரியா நாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் ஜார்ஜ் மரியான், கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு 90களில் பிரபல ஹீரோவாக வலம் வந்த அப்பாஸும் நடித்துள்ளார். இப்படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கிறார். பியாண்ட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசரை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த தனுஷ் படம் குறித்தும் பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்ட பதிவில், “நான் இந்த படத்தைப் பார்த்துவிட்டேன். இது, ஜி.வி பிரகாஷ் மற்றும் அவரது குழுவினரின் நகைச்சுவையான, அதே நேரத்தில் அனைவரையும் நெகிழவைக்கும் ஒரு படம். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். அவரது பாராட்டை பெற்றிருந்த இப்படம் மார்ச் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில் ஒரு திரையரங்கிற்கு சென்ற அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது வரும் சட்டமன்ற தேர்தல் குறித்து பேசிய அவர் அனைவரும் ஓட்டு போட வேண்டும் எனக் கூறினார். அவர் கூறியதாவது, “தமிழக சட்ட மன்ற தேர்தல் நெருங்குகிறது. அனைவரும் கட்டாயம் ஒட்டு போடுங்கள். தமிழ்நாட்டின் வாக்கு சதவீதம் உயரவேண்டும். அது தான் நாட்டுக்கு நல்லது. எந்த கட்சியைப் பற்றியும் நான் பேச விரும்பவில்லை. நான் அரசியலில் இல்லை. அரசியல் குறித்து நான் இதுவரை எதையும் பேசியதும் இல்லை. ஆனால், ஒட்டு போடுவது ஜனநாயக கடமை. அதைத் தவறாமல் செய்யுங்கள்” என்று கூறினார். இவரது கருத்துகள் பலரது கவனத்தை பெற்றுள்ளது.
