“தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை எக்காரணம் கொண்டும் காலூன்ற விடக்கூடாது!” – அமைச்சர் கே.என்.நேரு | trichy dmk meeting, KN nehru says, bjp should not be allowed in TN In any form

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழகத்தைப் புறக்கணிக்கும் ஒன்றிய அரசு மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய அரசின் குளறுபடிகளால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டினை உடனடியாக நீக்கக் கோரியும், தமிழகத்திற்கு போதிய திட்டங்களை வழங்காமல் வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க (NDA) அரசைக் கண்டித்தும், மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நாளை காலை 10 மணி அளவில் பி.எஸ்.என்.எல் (BSNL) அலுவலகம் அருகே நடைபெறும் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பிறகு, இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு,

“கடந்த நான்கு, ஐந்து தேர்தல்களாக தி.மு.க தலைமையில் உருவான கூட்டணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கூட்டணியில் உள்ள அனைவரின் மனமும் புண்படாத வகையில், அனைவரையும் அரவணைத்து இந்த வெற்றிகரமான கூட்டணியைச் சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார்.

கேஸ் விலை உயர்வு போன்ற விவகாரங்களில் ஒன்றிய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கூடத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு, எந்த அதிகார வரம்பில் யார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடத் தெரியவில்லை.

ஒன்றிய அரசு செய்ய வேண்டியதை, முதல்வர் உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். தேர்தல் நேரம் என்பதால் நம்மை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அவர் பேசி வருகிறார். இந்தத் தேர்தல் தமிழ்நாட்டிற்கு மிக முக்கியமான தேர்தல்.

தமிழ்நாட்டில் பாஜகவை எக்காரணம் கொண்டும் காலூன்ற விடக்கூடாது என்பதில் தி.மு.க கூட்டணி உறுதியாக உள்ளது. இது, தமிழ்நாடு-டெல்லிக்குமான தேர்தல் என்பதை முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். இடையில் சிலர் புதிதாகக் கட்சி ஆரம்பித்துச் சில விஷயங்களைக் கூறினாலும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தி.மு.க தலைமையிலான கூட்டணி மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

வரவிருக்கும் தேர்தலிலும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஒரு மகத்தான வெற்றியைப் பதிவு செய்வோம்” என்றார்.

Source link