2026 சட்டமன்ற தேர்தலையொட்டி திருவள்ளூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
“தமிழ்நாட்டின் வடக்கு வாசலாக இருக்கும் திருவள்ளூருக்கு நான் வந்திருக்கிறேன். தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிக்கு வந்திருக்கிறேன்.
தமிழ்நாடு எப்போதுமே தனித்துவமான மாநிலம். அதற்குக் காரணம், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம். உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும். பெரும்பாலும், தமிழ்நாட்டின் கிராமத் தெய்வங்கள் வடக்கு நோக்கிதான் உட்கார்ந்திருக்கும்; ஏன் என்றால், தமிழ்நாட்டுக்கு ஆபத்து எப்போதும் வடக்கில் இருந்துதான் வரும்.
அப்படி, எதிர் வரும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற ஆபத்தைத் தடுத்து நிறுத்தும் தேர்தல்தான், இந்தத் தேர்தல். இதே திருவள்ளூரில் நின்றுதான், ஒன்றிய பா.ஜ.க. அரசை நோக்கி, “எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து கொண்டு வாருங்கள், தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control-தான்” என்று சவால்விட்டேன்.
அந்தச் சவாலில் தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும். அதற்கு திமுக கூட்டணிதான் வெற்றி பெற வேண்டும். திராவிட மாடல் 2.0 ஆட்சியை நாம் அமைத்தே ஆக வேண்டும்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு, அடிமை அ.தி.மு.க. ஆட்சி செய்த காலத்தில் தமிழ்நாடு எப்படிப்பட்ட தலைக்குனிவை எல்லாம் சந்தித்தது என்று நீங்கள் நினைத்து பாருங்கள். தினந்தோறும் ஒரு கோமாளிக் கூத்தை அரங்கேற்றுவார்கள்.
திறனற்ற நிர்வாகத்தால், மக்களை கொடுமைகளுக்கு – இன்னலுக்குள்ளாக்கி, வீதியில் இறங்கிப் போராடும் நிலைமைக்கு தள்ளிவிடுவார்கள்.
உங்களுக்கெல்லாம், ஆப்பத்தை குரங்கு பங்கிட்ட கதை தெரியும்தானே? அப்படிதான் இப்போது, பி.ஜே.பி. – அ.தி.மு.க.வை பங்கிட்டு கொடுக்கிறேன் என்று வந்து, பழனிசாமி எனும் அடிமையை அடையாளம் கண்டு, அ.தி.மு.க. தலைவராக – அதாவது, பா.ஜ.க. கிளைச்செயலாளராக நியமித்திருக்கிறார்கள்.
தனக்கு பதவி கொடுத்தால் போதும், சம்பந்திக்கு ரெய்டு நடக்காமல் இருந்தால் போதும், இதற்காக பழனிசாமி கொடுத்த விலைதான், தமிழ்நாட்டு உரிமைகள்.
கிராமத்தில், “இருக்க இடம் கொடுத்தால் மடத்தை கேட்பான்” என்று சொல்வார்கள். அதுபோன்று, பழனிசாமி எனும் அடிமை இருக்கும் தைரியத்தில்தான், “அ.தி.மு.க.வை வைத்து, N.D.A. ஆட்சி நடத்துவோம்! இந்தியைத் திணிக்கும் மும்மொழித் திட்டத்தை செயல்படுத்துவோம்” என்று பா.ஜ.க.வினர் இஷ்டத்துக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ” என தெரிவித்தார்.
