தயங்கும் மு.க.ஸ்டாலின்: சூட்கேஸ் வழிய வழிய புகார்கள்- கைவைத்தால் கலகமாகும் திமுக – big challenges for mk stalin with restructuring dmk after complaints from cadre

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பின்னர், திமுக கட்சியாக ரீதியாக சீர்திருத்தங்களுக்கு தயாராக தொடங்கியுள்ளது. ஆனால் அது உண்மையாகவே நடைபெறுகிறதா, இல்லை வெறும் கண் துடைப்பு மட்டுமா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது. ஏனெனில் புகார்கள் குவிந்த பின்னரும் இதுவரை பெரிதாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

ஆட்சியை இழப்பதும், மீண்டும் ஆட்சிக்கு வருவதும் திமுகவிற்கு புதிதல்ல. இன்னும் சொல்லப் போனால் 1991 சட்டப்பேரவை தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டும் வென்று வரலாறு காணாத தோல்வியை சந்தித்து, அடுத்த தேர்தலில் 173 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து எழுந்து நின்றது. ஒவ்வொரு தேர்தல் தோல்வியில் இருந்தும் கற்றுக் கொள்ளும் பாடங்கள் தான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

திமுக தோல்விக்கு காரணங்கள்

அந்த வகையில் ஜென் ஸி எழுச்சி, நடிகர் விஜய் மீதான ஈர்ப்பு, திரைக் கவர்ச்சி, திராவிட அரசியலுக்கு மாற்றை தேடிக் கொண்டிருந்தவர்களின் முடிவு, எஸ்.ஐ.ஆர் திருத்தங்கள் போன்றவற்றால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெக ஆட்சியை பிடித்து திமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. அதன்பிறகு தோல்விக்கான காரணங்களை ஆராய குழு அமைத்து, ஒவ்வொரு மாவட்டமாக பயணித்து நிர்வாகிகளை சந்தித்து பேசினர். இவர்கள் மூலம் புகார்கள், ஆலோசனைகளை பெற்று வந்து கட்சி தலைமையிடம் சமர்பித்தனர்.

தேர்தலுக்கு பின்னால் நடந்த சம்பவம்! உண்மை உடைத்த திமுக நிர்வாகி! – aandal priyadharshini

உடன்பிறப்புகள் அளித்த புகார் பட்டியல்

அறிவாலயத்திற்கு சூட்கேஸ், சூட்கேஸாக புகார் கடிதங்கள் கொண்டு வரப்பட்டன. பலர் ஆன்லைன் மூலமும் கட்சி தலைமைக்கு புகார் தெரிவித்திருந்தனர். எப்படி பார்த்தாலும் லட்சக்கணக்கில் புகார்கள் குவிந்திருக்கும். இவை அனைத்தையும் படித்து பார்த்திருக்க வாய்ப்பே இல்லை என்று ஒருபுறம் கூறினாலும், இதன் அடிப்படை சாராம்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பார். ஜென் ஸி தலைமுறையினருக்கு ஏற்ப கட்சியை வலுப்படுத்த மற்றும் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலையில், அதற்கு முன்பாக தோல்விக்கு காரணமாக துரோகிகளை களையெடுக்க வேண்டும் என்று உடன்பிறப்புகள் கொந்தளிக்கின்றனர்.

நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம்

எப்படி களையெடுப்பது? 2026 சட்டப்பேரவை தேர்தலின் போது கட்சிக்காக சரியாக வேலை செய்யாதவர்களை அடையாளம் கண்டு நீக்க வேண்டும். அதன்பிறகு திமுக செயற்குழு, பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களின் படி நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் செய்ததை அமல்படுத்த வேண்டும். அடுத்தகட்டமாக தேர்தல் நடத்தி அனைத்து மட்டங்களிலும் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். முதலில் ஒன்றியம், வட்டம், மாவட்டம் என படிப்படியாக தேர்தல் நடத்தி விட்டு, கடைசியாக மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தல் என நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். ஆனால் இதில் தான் பெரிய சிக்கலே காத்திருக்கிறது.

திமுகவில் வெடிக்கும் கோஷ்டி பூசல்

திமுகவின் பலமே சீனியர்களும், அவர்களின் ஆதரவாளர்களும், உள்ளாட்சியில் ஒவ்வொரு தலைவரும் பெற்றிருக்கும் நற்பெயர்கள், கோடிக்கணக்கான உடன்பிறப்புகள் தான். முழுவதும் இளைஞர்களாக பார்ப்பதற்கு திமுக தலைமைக்கு நன்றாக இருக்கலாம். வெளியில் இருந்து விமர்சிக்கும் அரசியல் பார்வையாளர்களும், பொதுமக்களும் ரசிக்கலாம். ஆனால் கட்சிக்குள் புகைச்சல் எழும். கோஷ்டி பூசல்கள் வெடிக்கும். சீனியர், ஜூனியர் மோதல்கள் பெரிதாகும். நிர்வாகிகள் தேர்தலையே நடத்த விடாமல் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

திமுக டூ தவெக – அதிமுக நிலைமை வருமா?

இதை எப்படி மு.க.ஸ்டாலின் லாவகமாக கையாளப் போகிறார் என்ற கேள்வி எழுகிறது. இதையடுத்து கட்சி தாவும் நிர்வாகிகளுக்கு செக் வைப்பது முக்கியமான விஷயம். அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சி தங்கள் வசமில்லாததால் திமுகவினரால் அதிகாரமோ, வருவாய் ஈட்டவோ முடியாது. எனவே 2031ல் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை எப்படியும் பொறுமை காக்க விரும்புவர்.
இத்தகைய சூழலில் நிர்வாகிகள் தேர்தல் என்று அவர்களின் பதவியில் கைவைத்தால் ஆளுங்கட்சியாக இருக்கும் தவெக பக்கம் தாவிவிட வாய்ப்பிருக்கிறது. அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள களேபரங்கள் போல திமுகவிலும் வெடிக்கலாம் என்கின்றனர். இதையும் திமுக தலைமை கவனமாக கையாள வேண்டியுள்ளது. எனவே கட்சிக்குள் நடக்கும் சீர்த்திருத்த முயற்சிகள் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்விக்கான பதில் மு.க.ஸ்டாலினிடமே இருக்கிறது.

Source link