தயாரிப்பு துறை வளர்ச்சி கடந்த மாதம் சற்றே உயர்வு

புதுடில்லி: நாட்டின் தயாரிப்பு துறை நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜனவரி மாதத்தில் சற்று மீண்டுள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கி வெளியிட்டுள்ள பி.எம்.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய ஆர்டர்களின் வரத்து அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ் அண்டு பி., நிறுவனத்தின் உதவியுடன் எச்.எஸ்.பி.சி., வங்கி மாதந்தோறும் இந்த அறிக்கையை வெளியிடுகிறது.

கடந்த மாதத்துக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தயாரிப்பு துறை நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சியை குறிக்கும் எச்.எஸ்.பி.சி., இந்தியா பி.எம்.ஐ., குறியீடு, கடந்த டிசம்பரில் 55 புள்ளிகளாக இருந்த நிலையில், ஜனவரியில் 55.40 புள்ளிகளாக சற்று அதிகரித்துள்ளது. இந்த குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சியையும்; குறைவாக இருந்தால் சரிவையும் குறிக்கும்.

உள்நாட்டு சந்தையில் தேவை அதிகரித்ததே விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆசியா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்தாலும், அதன் வேகம் குறைவாகவே இருந்தது.

பணியமர்த்தல்கள், கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு சற்று அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், உள்ளீட்டு பொருள்களின் விலை உயர்ந்தாலும், நிறுவனங்களின் விற்பனை விலை உயர்வு, கடந்த 22 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் வளர்ச்சி புள்ளிகள் 2025 ஜனவரி 57.70 பிப்ரவரி 56.30 மார்ச் 58.10 ஏப்ரல் 58.20 மே 57.60 ஜூன் 58.40 ஜூலை 59.10 ஆகஸ்ட் 59.30 செப்டம்பர் 57.70 அக்டோபர் 59.20 நவம்பர் 56.60 டிசம்பர் 55.00 2026 ஜனவரி 55.40

Source link