தரமற்ற உணவு வழங்கிய 'வந்தே பாரத்' கான்ட்ராக்டருக்கு ரூ.50 லட்சம் அபராதம்

புதுடில்லி: வந்தே பாரத் ரயிலில், தரமற்ற உணவு வழங்கியது தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு 10 லட்சம் ரூபாயும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு, 50 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பீஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ரிதேஷ் குமார் என்பவர், கடந்த 15ம் தேதி பாட்னா — ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகர் செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணித்தார். இந்த பயணத்தின்போது, அவருக்கு உணவு வழங்கப்பட்டது. அந்த உணவில் புழுக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரிதேஷ், அதனை வீடியோவாகவும் பதிவு செய்தார்.

பின்னர், இது குறித்து, சம்பந்தப்பட்ட ரயில் கோட்ட மேலாளரிடம் புகார் அளித்தார். இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.

அதன்படி, ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனத்துக்கு 10 லட்சம் ரூபாயும், உணவு சேவை வழங்கும் ஒப்பந்ததாரருக்கு 50 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டு, ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link