தர்மபுரி சட்டசபை தொகுதியில், தே.மு.தி.க.,விற்கு ஓட்டு சதவீதமே இல்லை என, முதல்வர் ஸ்டாலினிடம் தி.மு.க., நிர்வாகிகள்

தர்மபுரி சட்டசபை தொகுதியில், தே.மு.தி.க.,விற்கு ஓட்டு சதவீதமே இல்லை என, முதல்வர் ஸ்டாலினிடம் தி.மு.க., நிர்வாகிகள் போட்டு உடைத்து விட்டனர்.

கடந்த 20ம் தேதி நடந்த நேர்காணலில், தர்மபுரி தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க., தோல்விக்கான காரணம் குறித்து முதல்வர் கேட்டார். அப்போது, ‘வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்ததால், ஐந்து சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போட்டு விட்டனர்’ என, கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, ‘தர்மபுரி சட்டசபை தொகுதியில், தே.மு.தி.க.,விற்கு எந்த அளவிற்கு மக்களிடம் ஆதரவு உள்ளது’ என, முதல்வர் கேட்டுள்ளார்.

தி.மு.க., நிர்வாகிகள், ‘தே.மு.தி.க.,விற்கு தர்மபுரி தொகுதியில், 5,000 முதல், 7,000 ஓட்டுகள்தான் உள்ளன. நம் தயவில்தான், அக்கட்சி வெற்றிபெற வேண்டும். அதற்கு, நாமே நின்று வென்று விடலாம்’ என தெரிவித்துள்ளனர். ஆனால், தொகுதியில் கட்சியின் நிலவரம் கவலைக்கிடமாக உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

தர்மபுரி மாவட்டத்தில், தி.மு.க.,வை விட மற்ற கட்சிகள் வலுவாக உள்ளன என, முதல்வரிடம் நிர்வாகிகள் உளறி கொட்டியுள்ளனர். மாநில, மாவட்ட நிர்வாகிகள், கட்சியை வளர்ப்பதை விட தங்களை வளர்த்து கொண்டதால் கட்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. இதை தலைமையும் புரிந்து கொண்டது.

நல்லம்பள்ளி ஒன்றியத்தில், அ.தி.மு.க., கூட்டணியிலுள்ள பா.ம.க., வலுவாக உள்ளது. தர்மபுரி ஒன்றியத்தில், அ.தி.மு.க., – தி.மு.க., சமபலத்துடன் உள்ளன. தர்மபுரி டவுன் பகுதியில் எப்போதும், தி.மு.க.,விற்கு சாதகமாக தான் ஓட்டுகள் விழும்.

அதேநேரம், புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்கள், சிறு, குறு வியாபாரிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்த தேர்தலுக்காக காத்திருக்கின்றனர். இதில், அ.தி.மு.க., மற்றும் பா.ம.க.,வினர் வணிகர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை கையிலெடுத்தது, அ.தி.மு.க, கூட்டணிக்கு சாதகமாக மாறியுள்ளது. இதை தி.மு.க.,வால் தடுக்க முடியாது. இவை அனைத்தும் தேர்தலில் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link