சண்டிகர்:பஞ்சாபில், அரசு அதிகாரி தற்கொலை வழக்கில், அமைச்சர் பதவியை லால்ஜித் சிங் புல்லர் ராஜினாமா செய்த நிலையில், அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பட்டி தொகுதி எம்.எல்-.ஏ.,வான லால்ஜித் சிங் புல்லர், 44, போக்குவரத்து மற்றும் சிறைத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
சமீபத்தில், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அரசு கிடங்கு கழகத்தின் மாவட்ட மேலாளர் ககன்தீப் சிங் ரந்தாவா விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
முன்னதாக அவர், தன் முடிவுக்கு அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் தான் காரணம் என, வீடியோ வெளியிட்டிருந்தார்.
விசாரணை நியாயமாக நடக்க அமைச்சர் பதவியை லால்ஜித் சிங் புல்லர் ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து, அமைச்சர் பதவியை அவர் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், தற்கொலை செய்த அரசு அதிகாரி ககன்தீப் சிங் ரந்தாவாவின் மனைவி உபேந்தர் கவுர், அமிர்தசரசில் உள்ள ரஞ்சித் அவென்யூ போலீஸ் ஸ்டேஷனில், லால்ஜித் சிங் புல்லர் உள்ளிட்ட மூவர் மீது புகார் அளித்தார்.
இதன்படி, மூவர் மீதும் தற்கொலைக்கு துாண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
