2026ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகையின் அடிப்படையில், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வந்தது. இதனால், தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனக் கூறப்பட்ட நிலையில், மத்திய அரசு முயற்சி செய்து வரும் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு முதல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க ஒன்றிய பா.ஜ.க அரசு தீவிரம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உயர்த்தப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் 2029ஆம் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான மசோதாவை விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 543இல் இருந்து 816ஆக உயரும் என்று கூறப்படுகிறது. அதன் மூலம் மக்களவையில் பெண்களுக்கு 273 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒன்றிய பா.ஜ.க அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகான தொகுதி மறுவரையறையை மேற்கொண்ட பின்னரே மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் எனும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முந்தைய முடிவிலிருந்து (128-ஆவது அரசியலமைப்புச் திருத்தச் சட்டம், 2023) விலகுவதாக இது அமைந்துள்ளது.
குறிப்பாக, 4 பெரிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இது செய்யப்படுவதாகத் தோன்றுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய மிக முக்கியமான நகர்வு மேற்கொள்ளப்படுவது முன்னெப்போதும் நாம் கண்டிராதது. எனினும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், பெண்ணுரிமைக்காக நூறாண்டுகளுக்கும் மேலாக முன்னின்று போராடி வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசாகவும் இந்த முடிவை எந்த நிபந்தனைகளுமின்றி நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அதே வேளையில், நியாயமான தொகுதி மறுவரையறை எனும் எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்பதையும் வலியுறுத்துகிறேன். மாநிலங்களின் தற்போதைய தொகுதி அளவு எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது என்பதுதான் தொடர்ச்சியாக நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு. இதனை உறுதிசெய்ய, அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தற்போதுள்ள தொகுதி அளவு எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரினை இதற்காகக் கூட்டி, தொகுதி மறுவரையறை, தொகுதி எண்ணிக்கை உயர்வு, தற்போதுள்ள விகிதாசாரத்திலேயே மாநிலங்களின் தொகுதி அளவு தொடர்வது, அது அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்கிற உறுதிமொழி ஆகியவற்றுக்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
