தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய், இன்று (28.03.2026) பெரம்பூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டது. இதற்காக எம்.கே.பி நகர் பேருந்து நிறுத்தம் அருகே பரப்புரை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என தவெக தரப்பில் கடந்த 25ஆம் தேதி தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது. இத்தகைய சூழலில் தான், எம்.கே.பி நகர் பேருந்து நிறுத்தம் பகுதி என்பது நெருக்கடியான இடம் என்பதாலும், அந்த இடத்தில் 3 ஆயிர பேர் கூட முடியாது என கூறி விஜய்யின் பிரச்சாரத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
மேலும் மாற்று இடம் கோரி விண்ணப்பிக்க தவெகவுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியது. இந்த விவகாரத்திற்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக உள்ளனர் என பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்தார். இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு செயலாளருமான அர்ச்சனா பட்நாயக்கை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் விஜய் நேரில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் உயர் அதிகாரிகள் 10 பேரை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைக் குறிப்பிட்டு அவர் சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் போலீஸ் பொறுப்பு டிஜிஜி வெங்கட்ராமன், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், தலைமைச் செயலாளர் முருகாணந்தம், உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உள்ளிட்டோரை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அப்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளான செங்கோட்டையன், சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிடோர் உடன் இருந்தனர்.
