தலைமை செயலகத்திற்கு சென்றார் விஜய்

சென்னை: தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிப்பதற்காக, த.வெ.க., தலைவர் விஜய் நேற்று தலைமை செயலகம் சென்றார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்திக்க, நேற்று மதியம் 2:50 மணிக்கு, சென்னையில் தலைமை செயலகத்துக்கு த.வெ.க., தலைவர் விஜய் சென்றார். அவருடன், செங்கோட்டையன் உள்ளிட்ட த.வெ.க., நிர்வாகிகளும், 20க்கும் மேற்பட்ட பாதுகாவலர்களும் வந்தனர்.

விஜய் திடீரென தலைமை செயலகம் வந்ததால், ஏராளமான ‘டிவி’ மற்றும் பத்திரிகை கேமராமேன்கள் குவிந்தனர்.

தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்துவிட்டு, அவரிடம் 3 நிமிடங்கள் வரை விஜய் பேசினார். பின், அங்கிருந்து உடனடியாக விஜய் புறப்பட்டு சென்று விட்டார்.

தலைமை தேர்தல் அதிகாரியை விஜய் சந்தித்தது குறித்து, செங்கோட்டையன் அளித்த பேட்டி:

த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்திற்கு, பல்வேறு கெடுபிடிகளை விதிக்கின்றனர். சென்னையில் ஹோட்டலில் நடத்த இருந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.

சென்னையில் விஜய் பிரசாரம் நடக்கவிருந்த இடத்தில், தடுப்பு வேலிகள் வைத்து குழி தோண்டினர். ஆனால், முதல்வர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் பல இடங்களில் பிரசாரம் செய்கின்றனர். விஜய் பிரசாரத்தை தடை செய்வது, தேர்தலில் ஒரு கட்சியை முடக்குவது போன்றது.

சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர், டி.ஜி.பி., ஆகியோர், தி.மு.க.,வுக்கு ஆதரவாக விஜய் பயணத்தை முடக்க முயற்சிக்கின்றனர்.

மேற்கு வங்கத்தில், 600 அதிகாரிகளை தேர்தல் கமிஷன் மாற்றி உள்ளது. ஆனால், தமிழகத்தில் பல ஆண்டுகளாக, ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளை மாற்றவில்லை. எனவே, அதிகாரிகளை மாற்றக்கோரி, விஜய் மனு கொடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link