சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தில், ஹிந்துக்களை கட்டாய மத மாற்றம் செய்யும் கும்பல் தலை துாக்கி வருவது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். பா.ம.க., பிரமுகர். இவர் அப்பகுதியில், ஹிந்துக்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதை தடுத்து வந்தார். மத மாற்ற கும்பல் குறித்து, ‘வீடியோ’ எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இதனால், 2019ம் ஆண்டில், தடை செய்யப்பட்ட, பயங்கரவாத அமைப்பான, பி.எப்.ஐ., எனும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளால், கொடூரமாக கொல்லப்பட்டார். இக்கொலை குறித்து, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, அப்பகுதியில் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள், ஹிந்துக்களை மத மாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை தடுத்து, மத மாற்ற கும்பல் குறித்து, ‘வீடியோ’ வெளியிட்டு அம்பலப்படுத்திய, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஆதித்யன் என்பவரை, திருவிடைமருதுார் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில், மத மாற்ற கும்பல் களமிறங்கி இருப்பது என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனால், அங்கு முகாமிட்டு விசாரணையை துவக்கி உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:ராமலிங்கம் கொலைக்கு காரணமாக இருந்த, மத மாற்ற கும்பலை சேர்ந்தவர்கள், மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசல் பகுதியில் தங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. அவர்கள், மத மாற்றத்தில் ஈடுபட்டு வருவதற்கான, சில ‘வீடியோ’ ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அதன் அடிப்படையில், மயிலாடுதுறையில் விசாரணை நடக்கிறது. திருமுல்லைவாசல் பகுதியைச் சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாதி அல்பாசித் கூட்டாளிகளும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
