"தளபதிக்கு உதயநிதி; எனக்கு கதிரவன்" – மகனுக்காக களமிறங்கிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

மகனுக்கு மகுடம்.!

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தன் மகன் கதிரவனுக்கு எப்படியாவது மகுடம் சூட்டிவிட வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் காய்நகர்த்தி வருகிறார். 2021 தேர்தலின்போதே கதிரவனுக்கு சிதம்பரம் தொகுதியை ஒதுக்குமாறு கேட்டார் அமைச்சர். ஆனால் அதற்கு `நோ’ சொல்லிவிட்ட அறிவாலயம், அதன் பிறகு கதிரவனுக்கு கடலூர் மாவட்டப் பொருளாளர் பதவியை வழங்கியது.

அதில் ஆறுதலடைந்த அமைச்சர், மகனை முன்னிறுத்தி சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டார். அதன் பிறகு சிதம்பரம் தொகுதியைத் தவிர்த்துவிட்டு, புவனகிரி தொகுதிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தார்.

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

“அப்பாவைவிட அதிகமாகச் செய்வேன்..!’’

அதன் தொடர்ச்சியாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து, “தளபதிக்கு உதயநிதியைப் போல எனக்குக் கதிரவன். அவரைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று தழுதழுத்திருக்கிறார்.

அத்துடன் என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம் எடுத்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத்தந்தது, தன் மகனுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணக்கு போடுகிறார் பன்னீர்செல்வம்.

இந்த நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகளைச் சந்தித்த கதிரவன், “அப்பா செய்ததைவிட அதிகமாகச் செய்வேன். தொகுதிக்கு மட்டுமல்ல, உங்களுக்கும்தான்’’ என்று அழுத்தமாகக் கூறிவருகிறார்.

“முதல்வர் அப்படிச் செய்ய மாட்டார்’’

இதற்கிடையே அமைச்சர் தரப்பின் நடவடிக்கை, புவனகிரி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ துரை கி.சரவணன் தரப்பை அதிருப்தியடைய வைத்திருக்கிறது.

‘`கடந்த தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தோம். ஆனாலும் மக்கள் பணியைத் தொடர்ந்து செய்துவருவதால், இந்த முறை எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். இந்த நிலையில், `அமைச்சர் மகன்’ என்ற அதிகாரத்துடன் திடீரென தொகுதிக்குள் நுழைந்தால், எங்கள் எதிர்காலம் என்னாவது… முதல்வர் ஸ்டாலின் அப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டார் என்று நம்புகிறோம்’’ என்று குமுறுகின்றனர் சரவணனின் ஆதரவாளர்கள்.

கதிரவன்

அதேநேரம், ‘‘எதிரணி வேட்பாளரான அ.தி.மு.க-வின் அருண்மொழித்தேவன் போன்ற ஒரு நபரை வீழ்த்த வேண்டுமென்றால் கட்சிக் கட்டமைப்புடன், பொருளாதார பலமும் வேண்டும். அந்த வகையில் இளைஞரான கதிரவன்தான் தகுதியானவர்’’ என்று முட்டுக்கொடுக்கிறது அமைச்சர் எம்.ஆர்.கே தரப்பு.

இந்த விவகாரம் குறித்து எம்.ஆர்.கே.பி.கதிரவனிடம் கேட்டபோது, “தி.மு.க தொண்டன் என்ற முறையில் விருப்ப மனு கொடுத்திருக்கிறேன். அது தவிர மற்றவர்களின் யூகங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை” என்று முடித்துக்கொண்டார்.

Source link