தூத்துக்குடியில் விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியும், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளருமான பில்லா ஜெகன் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காண்போம்.
தூத்துக்குடி மாவட்ட விஜய் நற்பணி மன்றத் தலைவர் பில்லா ஜெகன் தற்போது தவெகவில் இணையும் முயற்சியில் இறங்கியுள்ளார். விஜய் ரசிகர் மன்றம் முதல் ஆரம்பித்து நாளடைவில் விஜய் மக்கள் இயக்கமாக உருமாறிய போதும் பில்லா ஜெகன் தொடர்ந்து விஜய் ரசிகராக இருந்து களப்பணி செய்து வந்துள்ளார். அதே நேரத்தில் திமுகவில் இணைந்து தூத்துக்குடி மாநகர இளைஞரணிச் செயலாளராகவும் இருந்த பில்லா ஜெகன், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராகவும் செயல்பட்டுள்ளார்.
யார் இந்த பில்லா ஜெகன்?
விஜய் மக்கள் இயக்கத்தின் தூத்துக்குடியின் முகமாக அறியப்பட்டவர் பில்லா ஜெகன். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்த அஜிதா அகஸ்டின் தவெக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார். இவரது அண்ணன் தான் இந்த பில்லா ஜெகன். தனது இடத்தில் ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக அவர், தனது தங்கையான அஜிதாவை தவெகவில் இணைத்த போதிலும், அவரால் நீண்ட நாட்கள் அங்கு செயல்பட முடியாது போனது.
அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர்
தனிப்பட்ட காரணங்கள் மற்றும் சில வழக்குகள் தொடர்பாக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென பில்லா ஜெகன் திமுகவில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திமுகவில் இணைந்து செயல்பட்ட இவர், முன்னாள் மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராகவும், அவருக்கு மிக நெருக்கமானவராகவும் கட்சியில் அறியப்பட்டார்.
மறுப்பு தெரிவிக்கும் முதல்வர் விஜய்
இந்நிலையில் இவர் சில நாட்களாக தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்து, சென்னையில் இணையும் நாளுக்காகக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் பில்லா ஜெகன் கட்சியில் இணைவதை தவெக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான விஜய் விரும்பவில்லை என தவெகவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கட்சி ஆரம்பித்து, தேர்தலில் வெற்றி பெற்று, பின் இடைத்தேர்தலுக்குப் பிறகு வந்திருக்கும் பில்லா ஜெகனை கட்சியில் இணைய வேண்டாம் என முதல்வர் விஜய் மறுப்பு தெரிவித்துள்ளாராம். இதனால் சென்னையில் தங்கி, தவெகவில் உள்ள முக்கிய புள்ளிகளிடம் பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஓரங்கட்டப்படும் அனிதா ராதாகிருஷ்ணன்?
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் இருந்து ஓரங்கட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதாகி, விசாரணைக்குப் பிறகு போலீஸார் அழைத்துச் சென்றபோது, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணையச் சொல்லி போலீஸார் என்னைக் கட்டாயப்படுத்தினார்கள். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. திமுகவில் உறுதியாக இருப்பேன் என செய்தியாளர்களிடம் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.
காய் நகர்த்தும் அனிதா ராதாகிருஷ்ணன்?
திமுகவில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக அனிதா ராதாகிருஷ்ணன் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் விஜய் மக்கள் இயக்கத்தில் பிரபலமாக அறியப்பட்ட பில்லா ஜெகன் மூலம் அவர் தவெகவில் இணையக் காய் நகர்த்த உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதே சமயம் இனி வரும் இடைத்தேர்தல்களின் முடிவை வைத்த உறுதியான முடிவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் வருவார் எனவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
Source link
